வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கு ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றையும் ஆவணங்களாகப் பயன்படுத்தப் பரிசீலிக்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நவம்பர் மாதம் பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் திருத்த பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அதில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை தன்னிச்சையான முடிவு எனவும், இதனால் வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடைசியாக 2003-ஆம் ஆண்டிலேயே வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் நடைபெற்றது எனவும், தற்போது பிரிவு 326-ன் கீழ் தீவிர திருத்தம் கட்டாயம் தேவை என்றும் தேர்தல் ஆணையம் வாதிட்டதைச் சுட்டிக்காட்டியது.
விரிவான விசாரணைக்காக வழக்கை வரும் 28ஆம் தேதி உரிய அமர்வு முன்பு பட்டியலிடுமாறு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வரும் 21-ஆம் தேதிக்கு முன்னதாக வழக்கில் பதில் மனுவைத் தாக்கல் செய்யவும் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
அதற்கு, வரும் 28ஆம் தேதிக்கு முன்பு மனுதாரர்கள் எதிர்மனுவை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்காக ஏற்கனவே பயன்படுத்தப்படும் 11 ஆவணங்களுடன் சேர்த்து, ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றையும் பயன்படுத்தப் பரிசீலிக்குமாறும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.