பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வித்துறை அலுவலகம் முன்பாக 100-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் 3-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களை கற்றுத் தருவதற்காக 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 2011ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டனர்.
பணி நிரந்தரம் வழங்கப்படாமலும், ஊதிய உயர்வு இல்லாமலும் அவர்கள் பணியாற்றி வந்த நிலையில், பணி நிரந்தரம் வழங்கப்படும் என ஆட்சிக்கு வரும் முன்பு திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சியமைத்து 4 ஆண்டுகளாகியும் வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலகம் முன்பாக பகுதிநேர ஆசிரியர்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேட்டியளித்த பகுதிநேர ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் விளையாட்டில் சிறந்து விளங்குவதில், பகுதிநேர ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது எனத் தெரிவித்தனர்.
திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகளாகியும் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என வேதனை தெரிவித்த ஆசிரியர்கள், தங்கள் கோரிக்கைகளைப் பரிசீலிக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் எனத் தெரிவித்தனர்.