சீனாவில் அதிபராக இருக்கும் ஒருவர், பொதுவெளியில் தோன்றவில்லை என்றால் அதிகார மாற்றம் ஏற்படும் என்பது கடந்த கால வரலாறு. அதிபர் ஜி ஜின்பிங் என்ன ஆனார்? எங்கே இருக்கிறார் ? சீன அரசியலில் என்ன நடக்கிறது? யார் அடுத்த சீன அதிபர்? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சீன அதிபர் ஷி ஜின்பிங் எங்கே? இந்த கேள்வி தான் இப்போது சர்வதேச அளவில் கேட்கப் படுகிறது. உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நபர்களில் மிகவும் முக்கியமானவர் ஷி ஜின்பிங். சீனாவில் மக்களாட்சி கிடையாது. 1949ம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் சீன கம்யூனிஸ்ட் கட்சி தான் சர்வ அதிகாரமும் கொண்ட ஒரே கட்சி. கட்சியின் உயர்மட்டத் தலைவராக யார் வருகிறாரோ அவரே, நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
மாவோ சேதுங் நிறுவிய சீன கம்யூனிஸ்ட் கட்சி, 1949 ஆம் ஆண்டில் இருந்து அதிகாரத்தில் ஏகபோக உரிமையை இன்று வரை கொண்டுள்ளது. அரசு, காவல் துறை முதல் ராணுவம் வரை நாட்டின் முழு கட்டுப்பாடும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கையில்தான் உள்ளது. பல சிறிய கட்சிகள் சீனாவிலிருந்தாலும் அவை கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிக்கக் கடமைப்பட்டுள்ளன.
சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் என்ற நாடாளுமன்றம், கட்சித் தலைமையால் எடுக்கப்படும் முடிவுகளைக் கேள்வியே கேட்காமல் ஏற்றுக் கொண்டு செயல்படுத்துகிறது. சீனா மீதான தேசப் பற்று என்பது சீன கம்யூனிஸ்ட் கட்சி மீதான பற்றுடன் இருப்பது என்று வலியுறுத்தப்படுகிறது.
சீன மக்கள் குடியரசு கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரும், மாவோ சேதுங்கின் நெருங்கிய நண்பருமான ஜீ ஸாங்க் ஷ்வான் என்ற தலைவரின் மகன் தான் ஜி ஜின்பிங்.
1974 ஆம் ஆண்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த ஜி ஜின்பிங், படிப்படியாக உயர்ந்து 1980 -ல் ஃபியுஜியான் மாநில ஆளுநரானார். தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு சீனாவின் துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். 2012 ஆம் ஆண்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகிறார். அடுத்த ஆண்டு வந்த தேர்தலில், முதல் முறையாக நாட்டின் அதிபராகிறார். அதன்பிறகு 2018 ஆண்டு, ஜி ஜின்பிங் வெற்றி பெற்று 2 முறை சீனாவின் அதிபராகிறார்.
ஒருவர் 10 ஆண்டுகள் மட்டுமே பொதுச்செயலாளராக இருக்க முடியும் என்பது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மரபு. கட்சி விதிகளில் திருத்தங்களைக் கொண்டுவந்து இந்த மரபை உடைத்த ஜி ஜின்பிங், 2023ம் ஆண்டு, தொடர்ந்து மூன்றாவது முறையாகச் சீனாவின் அதிபராகிறார்.
72 வயதான ஜி ஜின்பிங் கடந்த 13 ஆண்டுகளாகச் சீனாவின் அதிபராகவும், சீன ராணுவத்தின் தலைவராகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். இப்போது பெரும் அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ளார். கடந்த ஒரு வாரமாக, சீனாவில் நடைபெற்ற பல்வேறு முக்கிய அரசு நிகழ்ச்சிகளில் ஜி ஜின்பிங் கலந்து கொண்டாலும், அதிபருக்கான அணிவகுப்பு மரியாதை இல்லை.
கடந்த ஜூன் நான்காம் தேதி பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டரை ஜி ஜின்பிங் சந்தித்தார். ஜூன் 20 ஆம் தேதி நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபரைச் சந்தித்தார். ஜூன் 24 ஆம் தேதி சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்தித்தார். இந்த 3 முறை மட்டும் தான் ஜின்பிங் வெளியே வந்து இருக்கிறார். தான் கவனித்து வந்த பல முக்கிய வேலைகளைத் தனது ஆதரவாளர்களுக்குப் பிரித்துக் கொடுத்துள்ளார். உலகின் தவிர்க்க முடியாத சக்தியான ஜின்பிங்கை, சீனாவின் அரசு ஊடகங்களிலும் காட்டப் படுவதில்லை.
பிரேசிலில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் ஜி ஜின்பிங் கலந்து கொள்ளவில்லை. பிரதமர் லீ கியாங்கை அனுப்பி வைத்தார். சீனாவுக்கு வருகை தரும் பிற வெளிநாட்டுத் தலைவர்களையும் அரசு விருந்தினர்களையும், அதிபருக்குப் பதிலாகச் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர்களே வரவேற்கிறார்கள்.
கூடுதலாக, அதிபருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு பாதியாகக் குறைக்கப் பட்டுள்ளது. அவரது தந்தையின் கல்லறைக்குக் கொடுக்கப்பட்டு வந்த அதிகாரப்பூர்வ அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்படி, சீனாவில் நடக்கும் செயல்கள் எல்லாம், ஜி ஜின்பிங்கை ஓரம் கட்டப் படுவதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால், விரைவில் சீன அதிபர் பதவி விலகலாம் என்றும் கூறப்படுகிறது. உண்மையில் சீனாவில், வேலையில்லாத் திண்டாட்டம் 15 சதவீதத்துக்கும் மேல் வளர்ந்து வருகிறது. ரியல் எஸ்டேட் துறையிலும் கடும் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. செமி கண்டக்டர் துறையில் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
50 லட்சம் கோடி டாலர் என்ற அளவில் நாட்டின் கடன்சுமை அதிகரித்துள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் சரிவைக் கண்டுள்ளது. நாடெங்கும் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடக்கின்றன. இவையே, அதிபர் பதவியிலிருந்து ஜி ஜின்பிங்கை விலக வைக்கிறது என்றும் கூறப்படுகிறது.
அப்படி பதவி விலகும் பட்சத்தில், அடுத்த அதிபர் ஆகப் போவது ஜின்பிங்கின் ஆதரவாளர் வாங் யாங்கா? அல்லது முன்னாள் அதிபர் ஜின்டோவோ ஆதரவு பெற்ற மத்திய ராணுவ கமிஷன் துணைத் தலைவரான ஜெனரல் ஜாங் யூக்ஸியாவா? என்பது தான் கேள்வியாக உள்ளது.
யார் சீனாவின் அதிபராக வந்தாலும், இந்தியாவுக்குப் பேராபத்து காத்திருக்கிறது என்று புவிசார் அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.