தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
நாளிதழொன்றுக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவின் தென்மாநிலங்கள் அவற்றின் சொந்த மொழிகளிலேயே இயங்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார்.
சிஏபிஎஃப், ஜேஇஇ, நீட், யுஜிசி தேர்வுகள் 10-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அமித்ஷா, தமிழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகள் தமிழில் ஏன் கற்றுத் தருவதில்லை? எனவும் கேள்வி எழுப்பினார்.
இந்தியா வெளிநாட்டு மொழிகளில் இயங்க வேண்டும் என்பவர்களுடனேயே தங்களது போராட்டம் என கூறிய அவர், தமிழில் கற்பிப்பதை எதிர்ப்பதுதான் நிலைப்பாடு என்றால் அதில் தனக்கு பிரச்னை இருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் எனக்கூறிய அமித்ஷா, ஆட்சியில் பாஜக பங்கு பெறும் எனவும் தெளிவுபடுத்தினார். தமிழகத்தில் திமுக ஆட்சியில் 39 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மதுபான ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் அமித்ஷா குற்றஞ்சாட்டினார்.