திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை வழக்கில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. மாதவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிக்கும் நிலையில், இந்த வழக்கில் DC பாண்டியராஜன் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிய நவீன் தற்கொலை விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், உண்மையில் அவர் தற்கொலைதான் செய்து கொண்டாரா என்ற கேள்வி எழத் தொடங்கியிருக்கிறது.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயதான நவீன், சென்னையில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் மேலாளராக மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அவர் 40 கோடி ரூபாய் பணத்தை கையாடல் செய்ததாக கொளத்தூர் காவல் துணை ஆணையர் பாண்டியராஜனிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
விசாரணைக்கு வருமாறு போலீசார் தொலைபேசியில் அழைத்த நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக புழல் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நவீன் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
நவீன் தூக்கில் தொங்கிய குடிசையில் எந்த நாற்காலியும் இல்லை; அவரின் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு இருந்தாக செய்தி வெளியாகும் நிலையில், கைகள் கட்டப்பட்ட ஒருவர், Chair இல்லாமல் எப்படி தூக்கில் தொங்க முடியும்? என்று இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். காவல்துறை, வழக்குப் பதியாமல், எதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டது? அதுவும், கொளத்தூர் துணை ஆணையரே நேரடியாக விசாரித்தது ஏன் என்றும் அவர் வினவியுள்ளார்.
இன்னும் அஜித்குமார் மரணத்தின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் மீண்டும் ஒரு மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். நவீனை, தனியாக விசாரணை செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜன், அவசர அவசரமாக விடுப்பில் சென்றது ஏன் என்ற கேள்விக்கு, இன்னும் பதில் கிடைக்கவில்லை என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்விஎழுப்பியுள்ளார்,
இந்த வழக்கில், துணை ஆணையர் பாண்டியராஜனின் தொடர்பு குறித்து, சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளிலா, இரண்டு நாளிலா அல்லது ஒரு வாரத்திலா? எத்தனை நாட்களில் இந்த அறிக்கை வெளியிடப்படும் என்பது குறித்து ஏன் எந்தத் தகவலும் இல்லை? என்றும் அண்ணாமலை வினவியுள்ளார்.
இதனிடையே நவீன் விவகாரத்தில் புகார் குறித்து வழக்குப் பதிவு செய்யாமல் விசாரணை நடத்தியதாக மாதவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கரைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். நவீன் தற்கொலை வழக்கு தொடர்பாக, விடுமுறையில் உள்ள துணை ஆணையர் பாண்டியராஜனையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும் எனக் குரல் வலுத்து வருகிறது.