பாரதத்தின் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தின் பெருமையை உலக அரங்கிற்குக் கொண்டு சென்ற சுவாமி விவேகானந்தர் அவர்கள் சென்னைக்கு வருகை புரிந்த போது தங்கியிருந்த விவேகானந்தர் இல்லம் பொதுமக்கள் விரும்பி பார்க்கும் தளமாக விளங்கி வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் விவேகானந்தரின் ஆழமான சிந்தனைகளையும் நினைவலைகளையும் தாங்கியிருக்கும் விவேகானந்தர் ஹவுஸின் சிறப்பம்சங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
சரித்திரம் என்றால் நூல்களோடு மட்டும் முடிவடைந்துவிடுவதில்லை சில இடங்களில் இன்றளவும் வரலாறாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. பரந்து விரிந்த சென்னை மெரினா கடற்கரையை வாயிலாகக் கொண்டிருக்கும் இந்த விவேகானந்தர் இல்லம் வெறும் கட்டடம் அல்ல… லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்திய உன்னதத் தலைவரின் தொலைநோக்கு சிந்தனையின் சின்னம்.
இன்று நாம் காணக்கூடிய இந்த விவேகானந்தர் ஹவுஸ் ஒரு காலத்தில் ஐஸ் ஹவுஸ் என்று தான் அனைவராலும் அழைக்கப்பட்டுவந்தது. 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்க வணிகர் ஒருவர் பனிக்கட்டிகளைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்து விற்கத் திட்டமிட்ட போது அதற்கு உகந்த இடமாக வடிவமைக்கப்பட்ட இடம் தான் இந்த ஐஸ் ஹவுஸ். காலப்போக்கில் பனிக்கட்டிகளின் விற்பனை மந்தமடைந்து விற்பனைக்கு வந்த ஐஸ் ஹவுஸை பிலிகிரி அய்யங்கார் வாங்கி ஆன்மீகம் மற்றும் கல்விச் சேவைக்காக அர்ப்பணித்தார்.
சிகாகோ மாநாட்டில் தனது எழுச்சிமிக்க உரையின் மூலம் சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவை வலுவான நாடாக அறியச் செய்த சுவாமி விவேகானந்தர்
தங்கியிருந்த இந்த இடம் விவேகானந்தர் இல்லாமகவே மாறியது.
சுவாமி தங்கியிருந்த ஒவ்வொரு நாளும் இளைஞர்களுக்குப் புத்துணர்ச்சியை வழங்கக் கூடிய நாளாகவே அமைந்திருந்தது. இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படும் சுவாமி விவேகானந்தரின் ஆழமான வரலாற்றையும், அவர் தங்கியிருந்த நாட்களில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் நம்மிடம் உணர்வுப்பூர்வமாகப் பகிர்கிறார் சுவாமி ஈஷா பிரேமானந்தா.