நவீனமயமான தற்போதைய சமூகத்தில் அன்பும், கனிவும் முக்கிய தேவையாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் Good Deeds Club அமைப்பின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி, Good deeds Club அமைப்பின் தலைவர் அப்சரா ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவும் வகையில் வல்லமை அறக்கட்டளைக்கு 5 லட்சம் ரூபாய் நன்கொடையும், தகவல் தொழில்நுட்பத்தில் உயர்படிப்பை தொடர விரும்பும் திருநங்கை மயூராவுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியையும் ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், நவீனமயமான சமூகத்தில் மக்கள் இரக்கமற்றவர்களாகவும், கனிவற்றவர்களாவும் மாறி வருவதாகத் கவலை தெரிவித்தார்.
மனிதர்களிடம் ஏற்படுகின்ற பேராசை, சுயநலம் ஆகியவற்றை தடுத்தால்தான் அன்பை வழங்க முடியும் எனவும் அவர் அறிவுறுத்தினார். வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கில் பெண்களின் பங்கு முக்கியமானது என குறிப்பிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, சமூகமும் குடும்பமும் பெண்களை மையப்படுத்திதான் உள்ளதெனத் தெரிவித்தார்.