மருத்துவத்துறையில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரியாக விளங்குவதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எண்ணித் துணிக என்ற பெயரில் மருத்துவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, கொரோனா தொற்று காலத்தில் மருத்துவர்கள் தங்களின் உயிரை பொருட்படுத்தாமல் மக்களின் உயிரை காப்பாற்றியதாக புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், மருத்துவத் துறையில் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் விளங்குவதாகவும், தமிழகத்தில் சா்வதேச தரத்தில் மருத்துவ சேவை அளிப்பதால் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் தமிழகம் வந்து சிகிச்சை பெறுவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.