சேலம் குமரகிரி தண்டாயுதபாணி கோயிலில் மலைப்பாதை சரி செய்யப்படாததால் 10 ஆண்டுகளாகக் கோயில் திருப்பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதைப் போலச்
சேலம், அம்மாபேட்டை, குமரகிரி தண்டாயுதபாணி கோயில் அமைந்துள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசிக்கும் இந்தக் கோயிலில் விசேஷ காலங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயிலில்தான் திருப்பணிகள் நடைபெறாமல் இருப்பது பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது.
குமரகிரி தண்டாயுதபாணி கோயில் திருப்பணிக்காகக் கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லும் மலைப்பாதை மேடு, பள்ளமாகவும், குண்டு குழியுமாகவும் உள்ளதாகக் காரணம் கூறும் அறநிலையத் துறை அதிகாரிகள் திருப்பணிகளை நிறுத்தி வைத்துள்ளனர். அதே சமயம் மலைப்பாதையைச் சரி செய்யும் பணிகளையும் மேற்கொள்ளவில்லை.
திருப்பணிகள் நிறுத்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திருப்பணி விவகாரம் காரணமாகத் தலையணை பகுதியில் முருகன் சிலை கொண்டுவரப்பட்டு தினம் தோறும் பூஜைகள் நடக்கும் நிலையில், தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. கோயிலின் அடிவாரத்தில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எந்தவித வசதிகளையும் கோயில் நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை.
அதுமட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கோயில் வளாகத்தில் எரிக்கப்படுவது பக்தர்களை முகம் சுளிக்க வைக்கிறது.
மலை மீதுள்ள தண்டாயுதபாணியைப் பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாகக் கடந்த 2009 ஆண்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பக்தர்களின் பங்களிப்பாக 28.70 லட்சம் ரூபாய் தரப்பட்டது. இதனுடன் அறநிலையத்துறை நிதி சேர்த்து மொத்தம் 84.80 லட்சம் ரூபாயில் மலைப்பாதை அமைக்கப்பட்டது.
இந்தப் பாதை அமைக்கப்பட்டு போதிய பராமரிப்பு இல்லாததால் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. அதே நேரத்தில் கோயிலில் திருப்பணியும் துவங்கப்பட்டது. ஆனால் மலைப்பாதை சரியில்லாததால் திருப்பணிகள் தொடங்கப்பட்ட மூன்றே மாதங்களில் நிறுத்தப்பட்டு விட்டது.
முருக பக்தர்களுக்குப் பழனியில் மாநாடும் திருச்செந்தூரில் கும்பாபிஷேகமும் நடத்தியதாகக் கூறும் தமிழக அரசு சேலம் தண்டாயுதபாணி கோயிலில் திருப்பணிகளை மீண்டும் துவக்குமா என்ற கேள்வி பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.