ஈரோட்டில் புகழ்பெற்ற சென்னிமலை போர்வைகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடப்பதால் உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். அழிவின் விளிம்பில் உள்ள இந்த தொழிலை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர். இதுகுறித்து ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை சுற்றுவட்டாரங்களில் தயாரிக்கப்படும் போர்வைகள் நீண்ட கால பாரம்பரியம் கொண்டவை. கைத்தறி மற்றும் விசைத்தறி மூலம் உருவாகும் சென்னிமலை போர்வைகளைப் பலரும் போட்டிப் போட்டு வாங்கிச் சென்றது முன்பொரு காலம்…ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ஏன் வெளிநாடுகளுக்கும் கூட சென்னிமலை போர்வைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த தொழிலை நம்பி பல லட்சம் தொழிலாளர்களும் உள்ளனர். ஆனால் கொரோனா காலத்திற்குப் பிறகு சென்னிமலை போர்வைகள் உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதன் பிறகும் வருடத்திற்கு வருடம் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் போர்வைகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன. வட மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் இங்கிருந்து நடைபெற்ற ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் போர்வை உற்பத்தியும் அதிகரித்துள்ளதால் சென்னிமலை போர்வைகளை வாங்குவதை அங்குள்ள நிறுவனங்கள் தவிர்த்து வருகின்றன. வெளிநாடுகளுக்கும் போர்வைகளை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 20 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னிமலை போர்வைகள் தேக்கமடைந்துள்ளன.
ஈரோடு, சென்னிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் இருந்து வந்த நிலையில், தற்போது பாதியாகக் குறைந்து 25 ஆயிரம் விசைத்தறி கூடங்களே செயல்பட்டு வருகின்றன. தொழில் நலிவடைந்து வருவதால் விசைத்தறி இயந்திரங்கள் உடைக்கப்பட்டு பழைய இரும்பு கடைக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சந்தையில் விசைத்தறி கூடங்களைத் தாண்டி பிரிண்டட் போர்வைகள் விற்பனைக்கு வருவதும் சென்னிமலை போர்வைகள் உற்பத்தி தொழிலுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.
பொங்கல் பண்டிகை காலங்களில் வீடுகளுக்கு வேட்டி, சேலை கொடுப்பது போல் தீபாவளி காலங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் போர்வை வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசு அமல்படுத்தினால் விசைத்தறி கூடங்களை காக்க முடியும் எனவும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கலாம் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதே நிலை நீடித்தால் சென்னிமலை போர்வைகள் உற்பத்தி தொழில் அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விசைத்தறி தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உற்பத்தியாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.