ராணுவ பலத்தை மேம்படுத்தும் விதமாக புதிய ஹைபர் சோனிக் க்ரூஸ் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது இந்தியா. ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கி அழித்ததாகப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அறிவித்திருக்கிறது.
ஒலியை விட 8 மடங்கு வேகம்… 1500 கிலோ மீட்டர் சென்று தாக்கும் திறன் எனப் பிற நாடுகளை மிரள வைத்துள்ளது இந்தியாவின் புதிய ஹைபர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை சோதனை.
எதிரி நாடுகளின் இலக்குகளை மிகவும் துல்லியமாகத் தாக்கும் வகையிலான அதிநவீன ஏவுகணைகளை புரோஜக்ட் விஷ்ணு திட்டத்தின் கீழ், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் பிரமோஸ், அக்னி-5, ஆகாஷ் அமைப்பையும் மேம்படுத்தி வருகிறது.
அதன்படி, தயாரிக்கப்பட்ட ஹைபர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை தற்போது பயன்பாட்டில் உள்ள பிரமோஸ் ஏவுகணையைவிட மிக ஆபத்தானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 11 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப் பாயும் ஹைபர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை, ஆயிரம் முதல் 2000 கிலோ வெடிமருந்துகள் மற்றும் அணு ஆயுதங்களைச் சுமந்துச் சென்று தாக்கும் திறன் கொண்டது.
குறைந்த உயரத்தில் பறக்கும் இந்த ஏவுகணை, தற்போது பயன்பாட்டில் உள்ள ரேடாரின் கண்களில் மண்ணை தூவி, அதிவேகத்தில் சென்று இலக்கை அழிக்கக் கூடியது. நிலம், கடல் அல்லது வான் பரப்பு என எங்கிருந்து வேண்டுமானாலும் ஏவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரமோஸ் ஏவுகணை மணிக்கு மூவாயிரத்து 675 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் நிலையில், புதிய ஹைபர் சோனிக் ஏவுகணையின் வேகத்தை பிரமோஸை விட மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது DRDO.
புதிய ஹைபர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ள நிலையில், ஹைபர்சோனிக் தொழில்நுட்பம் கொண்ட ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த வரிசையில் , நான்காவது நாடாக இந்தியாவும் இணைந்துள்ளது.
சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல்கள், சர்வதேச அளவில் பதற்றமான சூழல் போன்றவற்றிற்கு மத்தியில் புதிய ஹைபர்சோனிக் ஏவுகணை பரிசோதனை நடத்தியிருப்பது இந்திய ராணுவத்தின் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.