தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள் அமைக்கத் தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு கடும் சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் வகுப்பு ஒன்றுக்குச் சாதாரணமாக 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்திருக்கும் நிலையில், ப வடிவ இருக்கைகள் சாதகமா பாதகமா என்று கேள்வி எழுந்துள்ளது.
சமூக புரட்சியை ஏற்படுத்திய ‘ஸ்தனார்த்தி ஸ்ரீகுட்டன்’ (Sthanarthi Sreekuttan) என்ற மலையாளத் திரைப்படத்தின் காட்சிகள்தான் இவை. கேரளாவில் பல பள்ளிகளில் மாணவர்களின் இருக்கைகள் அரைவட்டமாக மாற்றப்பட்டிருப்பதற்கு இப்படத்தின் தாக்கமே காரணம்
இந்த புதிய முயற்சி மாணவர்கள் மத்தியில் உளவியல் ரீதியாக நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், கேரளாவைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் ஒருசில பள்ளிகளிலும் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன் எதிரொலியாகத் தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ‘ப’ வடிவில் இருக்கைகளை மாற்றுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகளை அமைக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
பின்வரிசை, முன்வரிசை என்ற பாகுபாட்டைக் களையும் விதமாகவும், மாணவர்கள், ஆசிரியர்கள் இடையேயான தொடர்பை மேம்படுத்தவும் முயற்சியை மேற்கொண்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
ஆனால் ‘ப’ வடிவ இருக்கை ஒரு பக்கம் வரவேற்பைப் பெற்றாலும், இருபுறமும் அமரும் மாணவர்கள், கரும்பலகையைப் பார்த்து எழுத, கழுத்தை ஒருபுறமாகத் திருப்பி வைத்திருக்க வேண்டும். இதனால் கழுத்து வலி ஏற்படும் எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்..
மாணவர்களை ‘ப’ வடிவில் அமர வைக்கும்போது, கழுத்து வலி, கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அவர்களுக்கு, மருத்துவ ரீதியாக உடல்நல பாதிப்பு ஏற்படும் என, மருத்துவத் துறை நிபுணர்கள் எச்சரித்திருப்பது பெற்றோரைக் கவலை அடையச் செய்துள்ளது.