தமிழக அரசுத் துறைகளில் உயர் பொறுப்பு வகிக்கும் நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அரசின் செய்தி தொடர்பாளர்களாக நியமித்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய அரசு அதிகாரிகளைத் தேர்தல் பரப்புரைக்காக திமுக பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.
அமுதா, ராதாகிருஷ்ணன், ககன் தீப் சிங் பேடி மற்றும் தீரஜ்குமார் ஆகிய நான்கு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும், விளம்பரப்படுத்துவதற்கும் செய்தி மற்றும் விளம்பரத்துறை எனும் தனித்துறை செயல்பட்டு வரும் நிலையில், தற்போது செய்தித் தொடர்பாளர்களை நியமித்திருப்பது அரசுத்துறை அதிகாரிகள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக அனைத்து துறைகளும் தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்துத் தயாரிக்கப்படும் அனைத்து விதமான செய்திக் குறிப்புகளும் செய்தி மற்றும் விளம்பரத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் மூலம் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இப்பணிகளை மேற்கொள்வதற்காகத் தலைமைச் செயலகம் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். துறை சார்ந்த செயல் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாக விளக்கமளித்தாலும், தேர்தல் பிரச்சாரத்திற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை திமுக அரசு பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கியுள்ளன. ஓரணியில் தமிழ்நாடு எனும் தலைப்பில் திமுகவினர் வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரிக்கின்றனர். மறுபுறம், மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எனும் தலைப்பில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் தான் அரசு அதிகாரிகளை அரசின் செய்தித் தொடர்பாளர்களாக நியமித்திருப்பது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இயற்கை பேரிடர் காலங்களில் சிறப்பாக பணியாற்றி மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றிருப்பதோடு, திமுக அரசின் தலைமைக்கு மிக நெருக்கமானவர்களாக அறியப்படும் அதிகாரிகள் செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் அரசியல் நகர்வுகளும் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களுக்கான செயல்திட்டங்களை வகுக்கும் வியூக வகுப்பாளர்களை உடன் வைத்துக் கொள்ளும் நிலையில், தமிழக அரசின் மூத்த அதிகாரிகளையே அப்பணிகளுக்காகப் பயன்படுத்த, திமுக திட்டமிட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உள் மற்றும் காவல்துறை, வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை, மின்சாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை போன்ற முக்கியமான துறைகளைக் கையாளக்கூடிய அரசு அதிகாரிகளைச் செய்தித் தொடர்பாளர்களாக நியமித்திருப்பதன் மூலம் அவர்கள் ஏற்கனவே செய்து வந்த பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் திமுக அமைச்சர்கள் மீது மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் அதிருப்தியை, அதிகாரிகளை வைத்துச் சரிசெய்யலாம் என்ற திட்டத்தின் அடிப்படையிலும் திமுக அரசு இந்த நடவடிக்கையில் இறங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தேர்தலுக்கான வியூக வகுப்பாளர்களாக அரசு அதிகாரிகளை திமுக பயன்படுத்த முயற்சிப்பதாகவும் விமர்சனம் எழத் தொடங்கியுள்ளது.
மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்று மக்கள் நலனுக்கான திட்டங்களை உருவாக்கி அதனைச் செயல்படுத்த வேண்டிய முக்கிய பொறுப்புகளை வகிக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை, திமுகவின் தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்தும் முடிவுக்கு கடும் எதிர்ப்புகள் எழத் தொடங்கியுள்ளன.
மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு இயங்க வேண்டிய அரசு நிர்வாகத்தில் அரசியல் நுழைந்தால் அது மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இத்தகைய நடவடிக்கையை திமுக அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கையும் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.