ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு, இந்திய விமானப்படைக்கான அதிநவீன போர் விமானங்களை விரைவாக உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. தேஜஸ் விமானங்களுக்கான இரண்டு எஞ்சின்களை முதற்கட்டமாக அமெரிக்கா வழங்கியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், இந்திய விமானப்படைக்கு தேஜஸ் MK-1A ரக விமானங்களைக் கொள்முதல் செய்ய ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் 48,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் மேற்கொண்டது.
73 போர் விமானங்கள் மற்றும் 10 பயிற்சி விமானங்கள் என 83 தேஜஸ் Mk-1A என்ற ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களைத் தயாரித்து வழங்கும் பணியில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் இறங்கியது.
இதனையடுத்து, தேஜஸ் MK-1A ரக விமானங்களுக்கான என்ஜினை உலக அளவில் போர் விமான என்ஜின் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான அமெரிக்காவின் GE AERO SPACE நிறுவனத்திடமிருந்து வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் முடிவு செய்தது.
அதன்படி, அதிநவீன அம்சங்களுடன் கூடிய F -404 IN20 வகையைச் சேர்ந்த 99 என்ஜின்கள் கொள்முதலுக்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு 80 சதவீத தொழில்நுட்ப பரிமாற்றமும் உள்ளதாகக் கூறப்படுகிறது. கொரொனா நோய்த் தொற்று காரணமாக, என்ஜின்களைத் தயாரித்து வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தென் கொரிய விநியோகஸ்தரின் தாமதத்தால், விநியோகச் சங்கிலியில் இடையூறுகள் ஏற்பட்டதாகவும் கூறப் பட்டது.
2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்திய விமானப் படைக்கு ஒப்படைக்கவேண்டிய ஒரு தேஜஸ் MK-1A ரக விமானம் கூட ஒப்படைக்க முடியவில்லை. என்றாலும், இந்த ஆண்டு இறுதிக்குள், 12 தேஜஸ் Mk1A போர் விமானங்களை வழங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்திய விமானப்படை Mk1A மற்றும் Mk2 வகைகளை இணைத்து மொத்தம் 352 தேஜாஸ் விமானங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த பிப்ரவரியில், பெங்களூருவில் நடந்த ஏரோ இந்தியா 2025 நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய விமானப்படை தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் AP சிங், இந்திய விமானப்படைக்கான அடுத்த தலைமுறை போர் விமானங்களைப் பெறுவதில் தாமதம் ஆவதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ வேகமாக வைரலானது.
இந்நிலையில், 99 என்ஜின்களில் முதலாவது என்ஜின் கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவுக்கு வந்தது. இரண்டாவது என்ஜின் வரும் ஜூலை இறுதிக்குள் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய விமானப்படை 42 போர் விமானப் படைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற இலக்கை வைத்துள்ளது. ஆனால், தற்போது 31 படைப் பிரிவுகளே உள்ளன.
இதற்கிடையே, இந்தியாவில் புதிய தலைமுறை ஹெலிகாப்டர் என்ஜின்களை உருவாக்கப் பிரெஞ்சு விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனமான சஃப்ரானுடன் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய விமானப்படை Mk1A மற்றும் Mk2 வகைகளை இணைத்து மொத்தம் 352 தேஜாஸ் விமானங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. 2026–27 ஆம் ஆண்டுக்குள் முழு அளவிலான உற்பத்தி ஆண்டுக்கு 30 தேஜஸ் MK-1A போர் விமானங்களைத் தொடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
கடந்த பிப்ரவரியில், வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்பை பிரதமர் மோடி சந்தித்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும் கூட்டு அறிக்கை வெளியிடப் பட்டது. தொடர்ந்து, அமெரிக்காவின் அதிநவீன (Javelin) ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளை அமெரிக்காவிடம் இருந்து வாங்குவதற்கு இந்தியா பரிசீலனை செய்து வருகிறது.
மேலும், அமெரிக்க (Stryker) ஸ்ட்ரைக்கர் கவச சண்டை வாகன சோதனைகள், இந்திய இராணுவத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யாத நிலையில், இந்தியாவின் நிலப்பரப்புக்கு ஏற்ற ஸ்ட்ரைக்கர் கவச வாகனங்களை அமெரிக்காவுடன் இணைந்து தயாரிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
J20 மற்றும் J35 என அதிக எண்ணிக்கையிலான ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களைச் சீனா தயாரித்து வருகிறது. அவற்றில், பெரும்பாலானவற்றை, Line of Actual Control மற்றும் இந்தியாவுடனான எல்லையில் நிறுத்தி வைத்துள்ளது.
இந்தச் சூழலில், 5.5 தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான அட்வான்ஸ்டு மீடியம் காம்பாட் ஏர்கிராஃப்ட்டை (AMCA) இந்தியா உருவாக்கி வருகிறது. 2029-ஆம் ஆண்டுக்குள் ஐந்து Advanced Medium Combat Aircraft விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2032 ஆம் ஆண்டுக்குள் முழு உற்பத்தி ,சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும் என்றும், 2034 ஆம் ஆண்டுக்குள் 5.5 தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்படும் என்று செயல்திட்டம் வகுக்கப் பட்டுள்ளது. 2047ம் ஆண்டுக்குள் 5.5 தலைமுறை ஸ்டெல்த் போர்விமானங்களை உருவாக்க இந்தியா இலக்கு வைத்துள்ளது.
அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவுக்குப் பிறகு, ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களைக் கொண்ட நான்காவது நாடாக இந்தியா இருக்கும். விரைவில், தெற்காசியாவில் விமான சக்தி மற்றும் வான்வழி போர் களத்தை இந்தியா மறுவரையறை செய்து உலகையே வியந்து பார்க்க வைக்கும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.