மயிலாடுதுறையில் முதலமைச்சர் ஸ்டாலினின் வாகனப் பேரணிக்காக முக்கிய வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார்.
தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகளான பட்டமங்கல தெரு, சின்னக்கடை வீதி, கண்ணார் தெரு, கச்சேரி சாலை பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் வாகன பேரணி மேற்கொண்டார்.
இதற்கிடையே முதலமைச்சர் வருகையை ஒட்டி, முக்கிய கடை வீதிகளின் இரு புறங்களையும் திமுக-வினர் தடுப்புகள் வைத்து அடைத்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
மேலும், முக்கிய சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் பள்ளி சென்ற மாணவ, மாணவிகள், பணிக்குச் செல்வோர் பெரும் இன்னலுக்குள்ளாகினர்.