இந்தியாவில் முதல்முறையாக மும்பையில் ஷோரூமை திறந்துள்ளது டெஸ்லா கார் நிறுவனம். டெஸ்லா வாகனங்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்புள்ள நிலையில், 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான Y ரக கார்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க் தனது டெஸ்லா கார் நிறுவனத்தை சர்வதேச அளவில் விரிவுபடுத்த ஆர்வம் காட்டி வருகிறார். இந்தியச் சந்தையில் கால்பதிக்க நினைத்த டெஸ்லா நிறுவனம், மும்பையில் பிரமாண்டமாகத் தனது புதிய ஷோரூமை திறந்துள்ளது.
பாந்த்ராவில் உள்ள முதல் ஷோரூமை மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் திறந்து வைத்தார். மின்சார வாகன உற்பத்தியில் முன்னிலை வகித்து வரும் டெஸ்லா நிறுவனம் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள Y ரக கார்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த Y ரக கார்களில் RWD, AWD என 2 வகையான மாடல்களை அறிமுகப்படுத்திய டெஸ்லா குழு, முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசுக்கு கார்களின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கம் அளித்தது.
Y ரக கார்கள் சீனாவில் உள்ள ஷாங்காயில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. அமெரிக்காவில் EV மாடல் வேரியண்டின் விலை இந்திய மதிப்பில் 38 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய். சீனாவில் 31 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய்க்கும், ஜெர்மனியில் 46 லட்சம் ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
ஆனால் இந்தியாவில் Y ரியர்-வீல் டிரைவ் மாடல் 60 லட்சம் ரூபாய் வரையிலும், நீண்ட தூர ரியர்-வீல் டிரைவ் மாடல் கார் 68 லட்சம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.