பாலியல் துன்புறுத்தல் வழக்கின் FIR-ல் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை எப்படிச் சேர்க்க முடியும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இணையதளங்களில் உள்ள தன்னுடைய அந்தரங்க வீடியோக்களை அகற்றக்கோரி பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சம்மந்தப்பட்ட வீடியோ இடம்பெற்றிருந்த அனைத்து இணையதளங்களையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், 39 இணையதளங்களில் இந்த வீடியோக்கள் மீண்டும் பரவி வருவதாகவும், அதைத் தடுக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து பேசிய நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் முன்னிலையில் அவரது அந்தரங்க வீடியோக்களை ஆண் காவல்துறை அதிகாரிகள் பார்த்து விசாரித்ததற்குக் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற வழக்கு விசாரணையில் பெண் காவல் அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களிலிருந்து உடனடியாக நீக்க உத்தரவிட்ட அவர், விசாரணையை வரும் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.