பாகிஸ்தானில் வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயிற்சி பெற்றதாகவும், சிவகங்கைக்கு 2 முறை சென்று, வெடி மருந்துகள் வாங்கியதாகவும், பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவை தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த அபுபக்கர் சித்திக்கை, கடந்த 1-ஆம் தேதி ஆந்திராவில் வைத்து தமிழக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சட்ட விரோதமாகப் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்குச் சென்று, வெடிகுண்டுகள் தயாரிக்க பயிற்சி பெற்றதாக ஒப்பு கொண்டார்.
மேலும், கோவை குண்டுவெடிப்பை முன்னின்று நடத்திய தீவிரவாதி பாஷாவின், ரகசிய கூட்டங்களில் பங்கேற்றதாகத் தெரிவித்த அவர், 1998ம் ஆண்டு கோவையில் அத்வானி பங்கேற்கவிருந்த கூட்டத்தில் குண்டு வைத்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவித்தார்.
போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய மூவரும் தன்னுடைய சீடர்கள் என்று வாக்கு மூலம் அளித்த அபுபக்கர் சித்திக், தான் சொன்ன வேலையை, போலீஸ் பக்ருதீன் உள்ளிட்டோர் கச்சிதமாகச் செய்து முடிப்பார்கள் என்று கூறினார்.
மேலும், கொலைகளைச் செய்து விட்டு எப்படித் தப்பிக்க வேண்டும் என்பது பற்றி, தெளிவாக வகுப்பு எடுப்பேன் எனவும், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடிக்கு இரண்டு முறை வந்து, தலா 50 கிலோ வெடி மருந்துகளை வாங்கிச் சென்றதாகவும் வாக்கு மூலம் அளித்தார்.