உலக பாம்புகள் தினத்தையொட்டி பாம்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் அவசியம் குறித்து விளக்குவதற்கும் தமிழக வனத்துறை இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையைத் தொடங்கியுள்ளது. பாம்புகள் அதிகளவு உள்ள மாநிலங்களில் முதன்மையாக மாநிலமாகத் திகழும் தமிழகத்தில் பாம்புகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியக் கலாச்சாரத்தில் இலக்கியங்கள், சொல்லாடல்கள், கதைகள், ஆன்மீகம் என பல்வேறு தளங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படும் உயிரினங்களில் ஒன்று பாம்பு. இந்தியாவில் நாக வழிபாடு என்பது பல பண்பாடுகளிலும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
இத்தகைய பாம்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும் ஒவ்வொரு ஆண்டும் பாம்புகள் தினம் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு பாம்புகள் தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் நடைபெற்ற விழாவில் பாம்பு மீட்பாளர்களுக்கான செயல்திறன் பயிற்சியும் வழங்கப்பட்டது.
நாட்டிலேயே அதிக பல்லுயிர் தன்மை கொண்ட மாநிலங்களில் முதன்மையானதாக மட்டுமின்றி அதிக பாம்பு வகைகளைக் கொண்ட மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது. நகரவாசிகளுக்குப் பாம்புகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலும், அவை குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதாலும் பொதுமக்கள் மத்தியில் அச்ச உணர்வு அதிகரித்து வருகிறது.
பாம்புக் கடி குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததன் விளைவே இந்தியாவில் அதிகளவு உயிரிழப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கிறார் பாம்புகள் குறித்து நீண்ட ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்துவரும் சாந்தகுமார்.
பாம்பு கடித்துவிட்டால் பதட்டப்படுவதும், இறுக்கி கயிறுகளால் கட்டுவதும் தவறான நடைமுறை எனப் பாம்புகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
திரைப்படங்களைப் பார்த்து பாம்பு கடித்த இடத்தில் வாய்வைத்து ரத்தத்தை உறிவது போன்ற தவறான முறையைக் கையாள்வதே கை, கால்களை இழக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இனிவரும் காலங்களில் பாம்புகளுடன் மனிதர்களும் சேர்ந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும் எனவும், விவசாயிகளுக்கு நண்பனாகச் செயல்படும் பாம்புகளின் அவசியம் குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் வனத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.