திமுக எனும் விளம்பர ‘கம்பெனி’-யின் அடுத்த வெளியீடு ஓரணியில் தமிழ்நாடு என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தில் பாஜக- அதிமுக கூட்டணி அமைந்தது முதலே தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தூக்கத்தை தொலைத்து தவிக்கிறார். பாஜக எதிர்ப்பு என்ற கண்கட்டு வித்தை செய்வதன் மூலம், திமுக கூட்டணிக் கட்சிகளை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியுமா என்று திட்டம் தீட்டுகிறார் என தெரிவித்துள்ளார்.
இதற்காக திமுக என்ற விளம்பர ‘கம்பெனி’ வெளியிட்டிருக்கும் புதிய வெளியீடு தான் ஓரணியில் தமிழ்நாடு. இதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர், வீடு வீடாகச் சென்று திமுகவுக்கு ஆள் சேர்க்கும் வேலையை செய்து வருகிறார். வீடு வீடாக சென்று கதவைத் தட்டி திமுகவில் சேருமாறு மன்றாடுகிறார் என கூறியுள்ளார்.
முதலமைச்சரின் இந்த நாடகத்தில் அவரது கட்சியினரும், மூத்த நிர்வாகிகளும், பிரசார விளம்பர கம்பெனியின் உதவியுடன் களத்தில் இறங்கி, தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று கட்சி உறுப்பினர் சேர்க்கை நடத்துகின்றனர். ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குவதாகவும், திமுக-வில் இணையவில்லை என்றால் பணம் கிடைக்காது என்றும், திமுகவினர் பொதுமக்களை மிரட்டுவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன என்றும் அவர் கூளியுள்ளார்.
ஒரு கோடிக்கும் மேலாக உறுப்பினர்களை வைத்திருப்பதாக பீற்றிக் கொண்டிருந்த திமுகவினர், தற்போது கட்சிக்கு ஆள் சேர்க்க படாதபாடு படுவது வேடிக்கையாக இருக்கிறது. இதற்கு மண், மானம் என்று வீர வசனம் பேசி பிரசார நிறுவனத்தின் உதவியை கோரி இருப்பது, திமுகவின் கட்டமைப்பு எந்த அளவிற்கு வீழ்ந்து போயிருக்கிறது என்பதை அம்பலப்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படுத்துக் கொண்டே 200 இடங்கள் வெற்றி பெறுவோம் என்று வாய் சவடால் விட்டவர்கள், இன்று வீடு வீடாக சென்று ஆள் சேர்க்க ஆளாய் பறக்கின்றனர். 200 இடங்கள் தோல்வி பெறுவது மட்டுமல்ல, 200 இடங்களில் டெபாசிட் தொகை தேறுவதே கடினம் என்ற சூழலில், முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் வழக்கம்போல், தனது இறுதி ஆயுதமாக வெறுப்பு அரசியலை கையில் எடுத்து இருக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நாடகம் ஒருபுறம் என்றால், உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் மற்றொரு விளம்பர அரசியலையும் மு. க. ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த அவல ஆட்சி முடிய இன்னமும் 8 மாதங்கள் தான் உள்ளன. ஏறக்குறைய நான்கரை ஆண்டுகாலம் எதுவும் செய்யாமல் இருந்து விட்டு, தற்போது வீடு தேடி வரும் திட்டங்கள் என்ற பெயரில் ஸ்டிக்கர் ஒட்டும் அரசியல் செய்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே பல மாநிலங்களில் நடைமுறையில் உள்ள திட்டத்தை, அதிமுக ஆட்சிக்காலத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்த திட்டத்தை, மு.க. ஸ்டாலின் தற்போது தனது கனவில் உதித்த திட்டம் போல ஸ்டிக்கர் ஒட்டி பெயர் மாற்றி உலாவ விட்டிருக்கிறார். இந்த அரசியல் பிரசாரத்திற்கு 4 அரசு அதிகாரிகளையும் நியமித்து அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகிறார் எனறும் தெரிவித்துள்ளார்.
பல்வேறு மாநிலங்களில் அரசு திட்டங்களும், பணிகளும் எளிதாக மக்களை சென்றடைகின்றன. ஒரே குடையின் கீழ் இணையம் வாயிலாகவே மக்கள் அதிகார மையத்தை அணுகி தங்களுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் ஆட்சிக்காலம் முழுவதும் இதுபோன்ற எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் என கழித்து விட்டு ஆட்சி முடிவடையும் தருவாயில் முதலமைச்சர் இந்த நாடகத்தை நடத்துவது ஏன்? என்பது தான் கேள்வி என அவர் கூறியுள்ளார்.
தேர்தலுக்காக அவர் நடத்தும் இந்த விளம்பர அரசியலை மக்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை. திமுகவின் கொடூர ஆட்சியில் தமிழக மக்கள் நாள்தோறும் அனுபவித்து வரும் சொல்லொணா கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தில், புதிதாக பிறக்கும் குழந்தை முதல் வயதானவர்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு சீரழிவு, கட்டவிழ்த்து விடப்பட்ட ரவுடிகள் ராஜ்யம், நாள் தவறாமல் நடக்கும் கொலைக் குற்றங்கள், போதைப்பொருட்களால் ஏற்படும் சமூக சீரழிவு, ஆட்கடத்தல், ஆயுத கடத்தல், மாநிலம் முழுவதும் பெருகிப் போன மதுபானம், பாலியல் பலத்காரம் என்று வரலாற்றில் காணாத சீரழிவை தமிழகம் கண்டு வருகிறது என்றும், மக்கள் தாங்கள் படும் துன்பத்திற்கெல்லாம், திமுகவிற்கு தக்க பதிலடி கொடுத்து பாடம் புகட்ட சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் என்றும் எல்.முருகன் கூறியுள்ளார்.