சிரியாவில் உள்ள ராணுவ தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்திய நிலையில் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. ஈரான் உடனான மோதலை தொடர்ந்து, இஸ்ரேல் சிரியாவை குறிவைக்கக் காரணம் என்ன… விரிவாகப் பார்க்கலாம்..
சிரியாவில் உள்ள ராணுவ தலைமையகத்தை இஸ்ரேல் ஏவுகணைகள் தூள்தூளாக்கிய காட்சிகள்தான் இவை…. ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட பயங்கர சத்தம் நிலநடுக்கம் போன்ற அதிர்வை ஏற்படுத்த, நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த தொகுப்பாளர் ஒருவர், திடீரென பதறி ஓடிய காட்சி, தாக்குதலின் தீவிரத்தை உணர்த்துகிறது.
மத்திய கிழக்குப் பகுதிகளில கடந்த சில ஆண்டுகளாகவே அண்டை நாடுகளை அச்சுறுத்தி வரும் இஸ்ரேல், தீவிரவாத குழுக்களை ஒழிப்பதாகக் கூறி ஏவுகணைகளை வீசி வருகிறது. காசாவில் ஹமாஸ் தீவிரவாத குழு மீது அதிரடி தாக்குதலை நடத்திய இஸ்ரேல், அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக ஈரான் உடன் நேரடியாக மோதியது. தற்போது அங்கு போர்பதற்றம் தணிந்த நிலையில், இஸ்ரேலின் பார்வை சிரியாவின் பக்கம் திரும்பியிருக்கிறது.
சிரியாவின் தெற்கு நகரமான ஸ்வேய்தாவில் அரசுப் படைகளுக்கும், துரூஸ் ஆயுதக் குழுக்களுக்கும் இடையே ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் முறிந்ததால், அங்கு மீண்டும் சண்டை தொடங்கியது. துரூஸ் ஆயுதக் குழுவை சிறுபான்மை இனமாக கருதும் இஸ்ரேல், அவர்களை பாதுகாக்கும் நோக்கில், டமாஸ்கஸில் உள்ள ராணுவ தலைமையகம் மீதும், சிரிய அரசுப் படைகளின் வாகனங்கள் மீதும் ஏவுகணைகளை வீசியது.
துரூஸ் ஆயுதக்குழுக்கள் போர் நிறுத்தத்தை மீறியதால்தான், அரசுப் படைகள் பதிலடி கொடுத்ததாக சிரியா பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்த நிலையில், இதை ஏற்க இஸ்ரேல் மறுத்துவிட்டது. துரூஸ் இனத்தவர்கள் அதிகம் வசிக்கும் ஸ்வேய்தா பகுதியில் இருந்து அரசுப் படைகள் வெளியேறும் வரை தாக்குதல் தொடரும் என்றும் இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.
சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்தின் 20 ஆண்டுகால ஆட்சி கவிழ்ந்த பிறகு, இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களால் தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதிய இஸ்ரேல், சிரியாவின் ராணுவ நிலைகளைக் குறிவைத்து சில மாதங்களுக்கு முன் தாக்குதலை நடத்தியிருந்தது. அதன்பிறகு தற்போது மீண்டும் தனது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது இஸ்ரேல்.
1948ம் ஆண்டு இஸ்ரேல் உருவானபோது, அந்நாட்டுக்கு ஆதரவாக துரூஸ் இனத்தவர்கள் போரிட்ட நிலையில், அதற்குக் கைமாறு செலுத்தும் வகையில், சிரியாவில் உள்ள துரூஸ் இனத்தவருக்கு இஸ்ரேல் ஆதரவு கரம் நீட்டியுள்ளது. அரசுப் படைகளை எச்சரிக்கும் வகையில் இஸ்ரேல் தொடர் தாக்குதலை தற்போதும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.