கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் – தளி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டிகளைக் கருத்தில் கொண்டு மேம்பாலம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் – தளி சாலை ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் தனியார் பள்ளிகளும் குடியிருப்புகளும் நிறைந்த பகுதியாகத் திகழ்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இந்த சாலையில் அமைந்திருக்கும் ரயில்வே கேட், ரயில் வருவதாகக் கூறி அடிக்கடி அடைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
அதிலும் காலை பணிக்குச் செல்லும் நேரங்களிலும், பள்ளி கல்லூரிக்குச் செல்லும் நேரங்களிலும் ரயில்வே கேட் அடைக்கப்படுவதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அவ்வப்போது ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான முன்னெடுப்புகள் நடைபெறுவதும் பின்னர் அதனைக் கிடப்பில் போடுவதுமே வழக்கமாக இருந்து வருவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அண்மையில் ரயில்வே பாலம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்ட நிலையில், தற்போது அப்பகுதியில் செல்லும் உயர் மின் அழுத்தக் கோபுரத்தினால் அப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ரயில்வே கேட்டை கடந்து செல்வதற்கான உள்வட்ட சாலையில் நாள்தோறும் கடக்கும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களால் விபத்து ஏற்படக்கூடிய அபாயமும் உருவாகியுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.