தமிழகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை வழங்குமாறு தொடரப்பட்ட வழக்கில் 12 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மாநில தகவல் ஆணையருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை வழங்குமாறு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவில், கடந்தாண்டு நவம்பர் மாதம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்ததாகவும், தமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் மாநில தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் நலன் கருதிக் கேட்கப்பட்ட தகவல்களைத் தர மறுப்பது அடிப்படை உரிமையை மீறும் செயல் என்றும், எம்பி, எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை வழங்க மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.மாலா, தவெக அளித்த மனு மீது 12 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.