திருநெல்வேலிக் குப்பைக் கிடங்கில் கடந்த நான்கு நாட்களாகப் பற்றி எரியும் தீயில் இருந்து பரவும் கரும்புகையால் மூச்சுத்திணறல், சுவாசக்கோளாறு பிரச்சனைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தொடர்கதையாகி வரும் இந்த தீ விபத்திற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகள் ராமையன்பட்டி அரசுக் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. நாள் தோறும் 180 முதல் 200 டன் குப்பைகள் கொட்டப்படும் குப்பைக் கிடங்கில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக எதிர்பாராத விதமாகத் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
காற்றின் வேகமும் அதிகமாக இருந்ததால் குப்பைக் கிடங்கு முழுவதும் தீ பரவி வானை முட்டும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்தது. குப்பைக் கிடங்கிற்கு அருகில் உள்ள ராமையன்பட்டி, தச்சநல்லூர், மானூர் ரஸ்தா ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கும் கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பாளையங்கோட்டை ஜங்சன், டவுன் மற்றும் பேட்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டனர். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் குப்பைக் கிடங்கில் பரவும் தீயை முழுமையாகக் கட்டுப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது. குடியிருப்புகளைச் சூழ்ந்திருக்கும் புகை மூட்டத்தால் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை மூச்சு விடுவதற்கே சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற தீ விபத்தும், அதன் மூலம் ஏற்படும் பாதிப்பும் தொடர்கதையாகி வரும் நிலையில், தீயை உடனுக்குடன் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தேவையான தீயணைப்பு சாதனங்கள் இல்லை என்பதும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குப்பைக் கிடங்கில் தீ பரவாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பலமுறை விடுத்தும் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நாள்தோறும் பரவும் புகை மூட்டத்தால் மூச்சுத்திணறல், சுவாசக் கோளாறு, நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனை என பல்வேறு நோய்களுக்கு உள்ளாகும் மக்கள் தங்களைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள் என்று சொல்லும் அளவிற்குத் தள்ளப்பட்டுள்ளனர். பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரிப்பதோடு, இதுபோன்ற தீ விபத்துக் காலங்களில் அவற்றை உடனடியாக அணைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.