20 ஆண்டுகளாகத் திருநங்கையாகவே தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த வங்கதேச இளைஞர் மத்தியப் பிரதேசத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. வங்கதேச நபர் பிடிபட்டது எப்படி? இத்தனை ஆண்டுகள் திருநங்கை வேடம் தரிக்க காரணம் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.. விரிவாக
திருநங்கையாக நடிகர்கள் பல அழகாக நடித்திருப்பதைத் திரையில் பார்த்திருப்போம். ஆனால் இங்கோ திருநங்கை போர்வையில் பலரையும் நம்ப வைத்துள்ளார் இளைஞர் ஒருவர்.
நேஹா.. இதுதான் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பிடிபட்ட திருநங்கையின் பெயர். 8 ஆண்டுகள் திருநங்கையாகவே வாழ்ந்து வந்தவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளது உளவுத்துறை. புத்வாரா பகுதியில் திருநங்கை நேஹாவின் நடத்தையில் ஏற்பட்ட திடீர் மாற்றம், அங்குள்ள பொதுமக்களிடம் சந்தேகத் தீயை விதைத்திருக்கிறது. ரகசிய தகவலின் பேரில் நேஹாவை கண்காணித்த போலீஸ், நேஹா வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதை முதலில் கண்டறிந்தனர்.
சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த அவரை கைது செய்த போலீசார், தங்களுக்கே உரித்தான பாணியில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது.
நேஹாவின் உண்மையான பெயர் அப்துல் கலாம் என்பதும், 10 வயதிலேயே இந்தியாவுக்குள் ஊடுருவினார் என்பதும் விசாரணையின் வேகத்தை அதிகரித்தது. மும்பையில் 20 ஆண்டுகள் வசித்த அப்துல்கலாம், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தனது உருவத்தை, உடல் அமைப்பை மாற்றி நேஹா என்ற பெயரில் திருநங்கையாகவே 8 ஆண்டுகள் வாழ்ந்து வந்திருக்கிறார்.
உள்ளூர் ஏஜெண்டுகள் உதவியுடன் ஆதார், ரேசன் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை என அனைத்தையும் போலியாகப் பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது. பலமுறை வங்கதேசத்திற்கு சென்று வந்ததைக் கண்டறிந்த போலீஸார், அவருக்கு ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை வழங்கிய ஏஜெண்டுகளையும் விசாரணை வளைத்திற்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
அதே நேரத்தில் உளவுத்துறையும் அப்துல்கலாம் பற்றிய விவரங்களைச் சேகரித்து வருகின்றனர். உள்ளூர் திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த யாராவது அவருக்குத் தெரிந்தோ, தெரியாமலோ உதவி செய்தார்களா என்பதை ஆராய்ந்து வருகின்றனர். நேஹா பாலினரீதியாக திருநங்கையா அல்லது தனது அடையாளத்தை மறைக்க ஒருவராக மாறு வேடமிட்டு வந்தாரா என்பதைக் கண்டறியப் பாலின சரிபார்ப்பு சோதனையை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
சட்டவிரோத குடியேற்றம், அடையாள அட்டை மோசடி எனப் பிடிபட்ட அப்துல்கலாமை விசாரணைக்குப் பின் நாடு கடத்தவும் உளவுத்துறை திட்டமிட்டுள்ளது.