அனைத்து யுத்த தளங்களிலும் ஒருங்கிணைத்த நவீனப் போர் வலிமையுடன் திகழும் இந்தியா 2029ம் ஆண்டுக்குள் பாதுகாப்பு ஏற்றுமதியை இரட்டிப்பாக்கத் திட்டமிட்டுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூரில் இந்திய ஆயுதங்கள் காட்டிய அதிரடி வெற்றியைப் பார்த்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்திய பாதுகாப்பு தளவாடங்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்த ஆண்டுக்கான (Global Firepower Index )உலகளாவிய ஃபயர்பவர் இன்டெக்ஸ் என்னும் ராணுவ வலிமைமிக்க நாடுகளில் இந்தியா 4வது இடத்தைப் பிடித்துள்ளது. இது உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவப் படைகளில் ஒன்றாக இந்தியாவின் நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
நாடுகளின் போரை எதிர்கொள்ளும் திறனை மதிப்பிடுவதற்காக, மனிதவளம், ஆயுத தளவாடங்கள், போர் உபகரணங்கள், நிதி நிலைத்தன்மை மற்றும் போர் வியூகத் திறன்கள் உட்பட 60 அளவீடுகளின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப் படுகிறது.
முதலிடத்தில் அமெரிக்கா, இரண்டாவது இடத்தில் ரஷ்யா மற்றும் சீனா மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த வரிசையில், தென் கொரியா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா நான்காம் இடத்தில் நிமிர்ந்து நிற்கிறது.
2024ம் ஆண்டில் 9ம் இடத்தில் இருந்த பாகிஸ்தான் இந்த ஆண்டு 12ம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானின் ராணுவ வலிமையின் சரிவையே காட்டுகிறது. பாதுகாப்புத் துறையில் வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தவும் ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘தன்னிறைவு பாரதம்’ ஆகிய திட்டங்கள் பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப் பட்டது.
கடந்த 11 ஆண்டுகளில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் மீதான சர்வதேச நம்பிக்கை பெரிய அளவில் வளர்ந்துள்ளன. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியாவின் வீரத்தை மட்டுமல்ல, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட உள்நாட்டு பாதுகாப்பு ஆயுதங்களின் மேம்பட்ட திறனையும் உலகம் கண்டது. இதனால், உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட இந்திய ஆயுதங்களுக்கான உலகளாவிய தேவை அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே, 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு ராணுவத் தளவாட பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது. இதில் முதல் 3 இடங்களில் அமெரிக்கா, ரஷ்யா, ஆர்மேனியா ஆகிய நாடுகள் உள்ளன. 375 மில்லியன் டாலர்கள் மதிப்புக்கு பிரம்மோஸ் ஏவுகணைகளைக் கடந்த 2022 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் இறக்குமதி செய்துள்ளது. தொடர்ந்து வியட்நாம் மற்றும் இந்தோனேசியாவும் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க உள்ளன.
ஆப்ரேஷன் சிந்தூரில் இந்தியாவைப் பாதுகாத்த ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்புகளையும், பீரங்கித் துப்பாக்கிகளையும் வாங்க பலநாடுகள் ஆர்வம் காட்டியுள்ளன. அமெரிக்காவில் உள்ள பிரபல விமான தயாரிப்பு நிறுவனங்களான (Lockheed Martin) லாக்கீட் மார்ட்டின் மற்றும் (Boeing) போயிங் ஆகிய நிறுவனங்களுக்கு, இந்தியாவில் தயாரிக்கப்படும் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் உதிரி மற்றும் உடல் பாகங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
பிரான்ஸ் பாதுகாப்புத் துறைக்காக இந்தியாவிலிருந்து அதிக அளவு மென்பொருள் மற்றும் மின்னணு உபகரணங்களை இறக்குமதி செய்கிறது. ஆர்மேனியா நாட்டுக்கு ஏடிஏஜிஎஸ் பீரங்கிகள், பினாகா மல்டி பேரல் ராக்கெட் லாஞ்சர்கள், ரேடார்கள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் மற்றும் பினாகா பல்ஏவுகணை ராக்கெட் அமைப்புகள் போன்ற ஆயுத அமைப்புகளுக்கான இந்தியாவின் மிகப்பெரிய வாடிக்கையாளராக ஆர்மீனியா மாறியுள்ளது.
ஏற்றுமதி செய்யப்படும் பாதுகாப்பு ஆயுதங்களில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள், டோர்னியர்-228 விமானங்கள், பீரங்கி துப்பாக்கிகள், ராடார்கள், ஆகாஷ் ஏவுகணைகள், பினாகா ராக்கெட்டுகள் மற்றும் கவச வாகனங்கள் ஆகியவை முக்கியமானவை.
ஆகாஷ் ஏவுகணை அமைப்பின் மேம்பட்ட வகைகளை இந்தியாவுடன் இணைந்து தயாரிப்பதில் பிரேசில் ஆர்வம் காட்டி வருகிறது. கடந்த 2014-15-ம் ஆண்டில் இந்தியா தயாரித்த ராணுவத் தளவாட பொருட்களின் மதிப்பு சுமார் 46,429 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த நிதியாண்டில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 265 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
2024-25 நிதியாண்டில் பாதுகாப்பு ஏற்றுமதி 23,622 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் 21,083 கோடி ரூபாயை விட 12.04 சதவீதம் வளர்ச்சி ஆகும். மொத்த ஆயுத உற்பத்தி மதிப்பில், பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் இதர பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு 79.2 சதவீதம் ஆகும். மீதமுள்ள 20.8 சதவீதத்தைத் தனியார் துறை நிறுவனங்கள் பங்களித்துள்ளன.
நாட்டின் பாதுகாப்பு-தொழில்துறை தளத்தில், சுமார் 430 உரிமம் பெற்ற நிறுவனங்கள் மற்றும் 16,000 சிறு மற்றும் குறுந் தொழில் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. பாதுகாப்புத் துறையில் 100 சதவீத நேரடி அந்நிய முதலீடு அனுமதியையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன் காரணமாக, பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு, முதலீடுகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அதிகரித்துள்ளது.
தேஜஸ் போர் விமானங்கள், விமானம் தாங்கி போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், தனுஷ் பீரங்கி, எம்பிடி அர்ஜூன் டாங்க், இலகு ரக பீரங்கிகள், ராணுவத் தளவாடங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், ரேடார்கள், ராணுவத் தளவாட மென்பொருட்கள், ஆகாஷ் ஏவுகணைகள் ஆகியவை உள்நாட்டில் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன.
அடுத்த கட்டமாக, 2029 ஆம் ஆண்டுக்குள் 500 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அளவில் தனது பாதுகாப்பு ஏற்றுமதியை இரட்டிப்பாக்க இந்தியா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.