திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக, மில்லத் நகர், தோக்கவாடி, காயம்பட்டு, மண்மலை, செ.நாச்சிபட்டு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாது பெய்த மழையால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், திருக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சந்தப்பேட்டை, அரும்பாக்கம், அரியூர், மேலத்தாழனூர், கீழத்தாழனூர் உள்ளிட்ட கிராமங்களிலும் சுமார் ஒரு நேரம் கனமழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதோடு, சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகினர். மேலும், பள்ளி முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் கனமழை பெய்ததால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.