கோவை பேரூர் பட்டீஸ்வரன் கோயிலில் ஆகம விதிகளுக்குப் புறம்பாக நடை மூடிய பின் கோயிலைத் திறந்து, அறநிலையத்துறை அதிகாரிகள் விஐபி ஒருவருக்கு சாமி தரிசனத்திற்கு அனுமதித்ததாகப் புகார் எழுந்துள்ளது.
கோவை மாவட்டம், பேரூரில் புகழ்பெற்ற பட்டீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆகம விதிகளின்படி அன்றாட பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பூஜைகள் முடிந்து தரிசன நேரத்திற்குப் பின் மூடப்படும் கோயில் நடை மறுநாள் காலையே திறக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்றிரவு வழக்கம்போல் நடை மூடப்பட்ட பின், பட்டீஸ்வரன் கோயிலுக்கு வி.ஐ.பி ஒருவர் வந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்காக அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலையும், சன்னதியையும் திறந்து சாமி தரிசனத்திற்கு அனுமதித்ததாகக் கூறப்படுகிறது.
இதைக்கண்ட பக்தர் ஒருவர் உள்ளே சென்று அதிகாரிகளிடம் ஆகம விதிகளை மீறி இவ்வாறு செயல்படுவது முறையா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து அங்கு நடந்தவற்றைத் தனது செல்போனில் வீடியோ எடுத்த அவர் அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
அந்த காட்சிகள் தற்போது வைரலாகி இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.