கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், முதலாம் இராஜேந்திர சோழ மன்னனின் பிறந்தநாள் திருவிழா..! கங்கை கொண்ட சோழபுரம் கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா..! ஆடி திருவாதிரை திருவிழா ஆகியவற்றிற்கு வருகை தரும் பாரதப் பிரதமர் மோடி அவர்களை வரவேற்போம் என தெரிவித்துள்ளார்.
வடதிசை கங்கையும், தென்திசை ஈழமும், கிழக்கே கடாரமும் வென்றெடுத்த மாமன்னன் இராஜேந்திர சோழன். ‘‘நித்தில நெடுங்கடல் உத்திரலாடமும் வெறிமலர் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும்’’ என விவரித்து, கங்கை நீருடன் சோழர் படை தாயகம் திரும்பியதை எடுத்துக் கூறுகிறது இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தி சாசனம் என கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கப்பற்படை கொண்டு படைத்திறனில் முன்னோடி, சென்ற இடமெல்லாம் வெற்றி வாகை சூடிய சிங்கம், பார்போற்றும் கட்டிடக் கலையில் உலகம் வியந்த சிற்ப கலைஞன், நீதிநெறி தவறாமல் ஆட்சி நடத்திய மாமன்னன் என போற்றப்படுபவர் இராஜேந்திர சோழன். இராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில், தமிழகத்தின் கீர்த்தியும் ஆளுமையும் தென்கிழக்கு ஆசியா வரை எதிரொலித்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நமது வணிகம், சமயம், கட்டிடக்கலை தென்கிழக்கு ஆசியா முழுமையிலும் பரவி சிறப்புற்று விளங்கி இருந்தது. போற்றுதலுக்குரிய சோழப் பேரரசன், மாமன்னன் இராஜேந்திர சோழனின் நினைவை போற்றும் வகையில் அவரது பிறந்தநாள் ஆடி திருவாதிரை திருவிழாவையொட்டி, சோழர்களின் தலைநகராக விளங்கிய கங்கைகொண்ட சோழபுரத்தில் ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் விழாவில் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.
இது, தமிழர்கள் ஒவ்வொருவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழகத்தின் கலாச்சார பெருமையையும் உலகெங்கும் ஓங்கி ஒலித்து வரும் பாரதப் பிரதமர் இந்த விழாவில் பங்கேற்று நமக்கெல்லாம் பெருமை சேர்ப்பது சிறப்பான ஒன்றாகும் என கூறியுள்ளார்.
கங்கைகொண்ட சோழபுரம் வரும் பாரதப் பிரதமர் .நரேந்திர மோடி அவர்களை நாம் அனைவரும் உற்சாகத்துடன் வரவேற்போம்…! கங்கைகொண்ட சோழபுரத்தில் சந்திப்போம்..! மாமன்னன் இராஜேந்திர சோழனின் பெருமையினை போற்றிடுவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.