இந்தியா சிங்கத்தைப் போல் உருமாற வேண்டிய நேரம் இது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியில் ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்பான ஷிக்சா சம்ஸ்கிருதி உத்தன் நியாஸ் சார்பில் ஞானசபா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பாரதம் வலிமையாக வேண்டும் எனவும் பொருளாதார ரீதியில் வளமாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.
நாட்டின் அடையாளத்தை பாதுகாத்தால்தான் மரியாதை கிடைக்கும் எனக் குறிப்பிட்ட அவர் அடையாளத்தை இழந்துவிட்டால் பல திறமைகள் இருந்தாலும் உலகில் மதிப்பும் பாதுகாப்பும் கிடைக்காது எனத் தெரிவித்தார்.
இந்தியா இனிமேல் பழைய தங்கப் பறவையாக இருக்க வேண்டியதில்லை எனவும் சிங்கமாக மாற வேண்டும் எனவும் மோகன் பாகவத் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், சனாதன தர்மம் எழுச்சி பெறுவது கடவுளின் விருப்பம் எனக் குறிப்பிட்டார்.