முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பற்றிய சர்ச்சைக்குரிய பதிவால் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்…. அண்மையில் ஒபாமா கைது செய்யப்படுவது போல் டிரம்ப் வெளியிட்ட ஏஐ வீடியோ இணையத்தில் புயலைக் கிளப்பிய நிலையில், தற்போதைய பதிவும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
1994ம் ஆண்டு அமெரிக்காவில் கொலை வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட அமெரிக்கக் கால்பந்து ஜாம்பவானும், நடிகருமான OJ Simpson, WHITE BRONCO காரில் தப்பிச் சென்ற காட்சிகள்தான் இவை…. 1960-70ம் ஆண்டுகளில் கால்பந்து வீரராக புகழ்பெற்ற OJ Simpson, அதன்மூலம் ஹாலிவுட் திரையுலகில் கால்பதித்தவர். The Naked Gun series, Capricorn One, and The Towering Inferno போன்ற திரைப்படங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர்.
1994ம் ஆண்டு தனது முன்னாள் மனைவி நிக்கோல் பிரவுன் சிம்சன், ரொனால்ட் கோல்ட்மேன் கொலை வழக்கில் சிக்கியபோது WHITE BRONCO காரில் தப்பிச் சென்ற காட்சிகள் தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்பட்டன. பல கிலோ மீட்டர்கள் பின் தொடர்ந்த போலீசார் இறுதியில் அவரை கைது செய்தனர்.
அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் காட்சியை, முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா போலீசாரிடம் இருந்து தப்பிப்பது போல் சித்தரித்து வெளியிட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
அதில் OJ Simpson போன்று WHITE BRONCO காரில் ஒபாமா தப்பிச் செல்ல, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், போலீசார் பின்னால் துரத்துவது போலவும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருப்பது நெட்டிசன்களின் விமர்சனங்களுக்கு தீனி போட்டுள்ளது.
அண்மையில் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை கைது செய்வது போன்ற AI வீடியோவை டொனால்ட் ட்ரம்ப் பகிர்ந்தது அமெரிக்க அரசியலில் புயலைக் கிளப்பியது. இந்தக் குற்றச்சாட்டுக்கும் AI வீடியோவுக்கும் பதிலளித்த முன்னாள் அதிபர் ஒபாமா, ட்ரம்பின் விநோதமான குற்றச்சாட்டுகள் அபத்தமானவை.
அவர் மீது இருக்கும் பாலியல் வழக்கைத் திசை திருப்பும் பலவீனமான முயற்சி என்று கடுமையாகச் சாடியிருந்தார். இந்த நிலையில் ஒபாமாவைச் சீண்டும் வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள காட்சிகள் பலதரப்பு மக்களின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.