திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கில் அறநிலையத்துறை நிலைப்பாடு குறித்து எழுத்துப்பூர்வமாக மனுத்தாக்கல் செய்யப்படாததால் வழக்கு விசாரணையை வரும் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து மக்கள் கட்சி உட்பட பல்வேறு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.நிஷாபானு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மற்றொரு நீதிபதி ஸ்ரீமதி, மலை விவகாரம் தொடர்பான மனுக்களை விசாரணைக்கு அனுமதித்து உத்தரவிட்டார்.
இரு நீதிபதிகளும் மாறுபட்ட உத்தரவு பிறப்பித்ததால் வழக்கு விசாரணை 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கு நீதிபதி விஜயகுமார் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, அறநிலையத்துறை நிலைப்பாடு குறித்து எழுத்துப்பூர்வமாக மனுத் தாக்கல் செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார்.
மேலும், எல்லைகள் நிர்ணயம் தொடர்பான வரைபடம் தேவைப்படுவதால் வழக்கு விசாரணையை ஜூலை 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி விஜயகுமார் உத்தரவிட்டார்.