தேவையற்ற சந்தேகத்தைக் கிளப்பி குளிர்காய முனைந்த இண்டிக் கூட்டணியினர் தற்போது வெட்கத்தில் கூனிக்கூறுக வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
பஹல்காமில் அப்பாவி இந்தியர்களை மதத்தின் பெயரால் கொன்று குவித்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியான சுலைமான், அப்கான், ஜிப்ரான் ஆகியோரை “ஆபரேஷன் மகாதேவ்” மூலம் இந்திய இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது புண்பட்டிருந்த நமது மனதுக்கு ஆறுதலை அளிக்கிறது.
தங்கள் வீரதீரச் செயல் மூலம் இந்தியாவின் வலிமையை ஆணித்தரமாக உணர்த்திய இந்திய இராணுவத்தினருக்கும், இந்த மகிழ்ச்சியான தகவலை இன்று பாராளுமன்றத்தில் எடுத்துரைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பயங்கரவாதிகளின் பாகிஸ்தானிய அடையாள அட்டைகளை மத்திய அரசு பறிமுதல் செய்துள்ள நிலையில், இதற்கு முன், “பயங்கரவாதிகள் பாகிஸ்தானியர்கள் தானா?” என்று தேவையற்ற சந்தேகத்தைக் கிளப்பி குளிர்காய முனைந்த இண்டிக் கூட்டணியினர் தற்போது வெட்கத்தில் கூனிக்கூறுக வேண்டும்!
நமது பாரதப் பிரதமர் மோடியின் அரசு தாய்த்திருநாட்டைக் காக்கும் அனைத்து முயற்சிகளிலும் முழுமூச்சாக ஈடுபட்டு வரும் வேளையில், எள்ளளவும் தேசப்பற்று இன்றி பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் அளித்து, பாரதத்தின் பாதுகாப்பைச் சிதைக்கப் பார்க்கும் மலினமான செயலில் ஈடுபடுவதை இனியாவது இண்டிக் கூட்டணியினர் கைவிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.