உச்ச நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை உத்தரவால், நயினார் நாகேந்திரன் தொடர்ந்த தேர்தல் வழக்கை ஆகஸ்ட் 25 ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ராபர்ட் புருஸ் தரப்பில், வழக்கை விசாரிக்க ஆகஸ்ட் 20 ம் தேதி வரை இடைக்கால தடை விதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 25 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
மேலும் ராபர்ட் புருஸ்ஸின் வேட்புமனு, அவரின் சொத்து மற்றும் வழக்கு விவரங்கள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யவும் தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதி அறிவுறுத்தினார்.