வயநாடு நிலச்சரிவில் மனைவி, குழந்தைகளை உட்பட குடும்ப உறுப்பினர்கள் 11 பேரை இழந்த நபர், வெளிநாட்டு வேலையைத் துறந்து, மனைவியின் ஆசைப்படி, சொந்த ஊரில் உணவகம் நடத்தி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ஆம் தேதி பெருமழையைத் தொடர்ந்து, வயநாடு மாவட்டத்தில் பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
கண்ணெதிரிலேயே உறவுகளையும், உடைமைகளையும் இழந்து, மரணத்தின் விளிம்பிலிருந்து நூலிழையில் உயிர் மீண்ட ஆயிரக்கணக்கான மக்கள் நடைப்பிணமாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி மனைவி, குழந்தைகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் 11 பேரை இழந்த நௌஃபல் என்பவர், தனது வெளிநாட்டு வேலையைத் துறந்து, தன் வாழ்வை விழுங்கிய அதே ஜூலை 30 நாளின் பெயரில் உணவகம் ஒன்றைத் தொடங்கி உள்ளார்.
ஓமன் நாட்டில் வேலையை விட்டுவிட்டு மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பி, ஹோட்டல் நடத்த வேண்டும் என்பது தன் மனைவியின் கனவாக இருந்ததாகவும், மனைவியின் கனவை தற்போது நிறைவேற்றி இருப்பதாகவும் நௌஃபால் தெரிவித்தார்.
மேலும், யார் என்றே தெரியாத நிறையப் பேர் தன் வாழ்க்கையே மேம்படுத்த உதவியதாகவும், உதவியாளர்களில் பெரும்பாலானோரைத் தான் பார்த்தது கூட கிடையாது எனவும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
















