பஹல்காம் தீவிரவாதிகள் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் எப்படிக் கொல்லப்பட்டனர் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு கொன்றது எப்படி? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான TRF பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற நிலையில், இந்த வழக்கு உடனடியாக NIA-விடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி, பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பஷீர் மற்றும் பர்வேஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் ஏப்ரல் 21 ஆம் தேதி இரவு 8 மணியளவில், பைசரன் பள்ளத்தாக்கிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்துக்குப் பயங்கரவாதிகள் வந்ததாகவும், அவர்கள் கைகளில் ஏ.கே.-47 மற்றும் எம்9 துப்பாக்கிகள் இருந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் பயங்கரவாதிகள், இரவு உணவு மற்றும் தேநீர் அருந்திய பின்னர் வெளியேறும்போது, சிறிது உணவு, உப்பு, மிளகாய் மற்றும் மசாலாப் பொருட்களை எடுத்துச் சென்றனர் என்றும் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், குதிரை வீரர்கள், சுற்றுலாப் பயணிகள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் கடைக்காரர்கள் என மொத்தம் 1,055 பேர்களிடம் 3,000 மணி நேரத்துக்கும் மேலாக NIA விசாரணை நடத்தப்பட்டது. அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
கடந்த மே 22ம் தேதி ஸ்ரீநகரில் டச்சிகாம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக மத்திய புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்தது. பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்குள் தப்பிச் செல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. பள்ளத்தாக்கில் பதுங்குவது என்ற ஒரே வழி தான் பயங்கரவாதிகளுக்கு இருந்தது. அடர்த்தி மற்றும் கடினமான நிலப்பரப்பைக் கொண்ட டச்சிகாம் காட்டுப் பகுதிக்குள் பயங்கரவாதிகள் பதுங்கினர்.
அந்தப் பகுதி முழுவதையும் சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளைப் பிடிப்பதற்குத் தொடர்ச்சியான முயற்சிகள் கடந்த மே முதல் ஜூலை 22ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டன.
தகவல் பரிமாற்றத்துக்குப் பயங்கரவாதிகள் சீனாவின் ஹவாய் சாட்டிலைட் போனை பயன்படுத்தியுள்ளனர். சாட்டிலைட் போன் வழியாகப் பேசியதிலிருந்து சந்தேகத்துக்கு இடமான தகவல்களை NIA அதிகாரிகள் இடைமறித்துப் பெற்றுள்ளனர்.
பயங்கரவாதத் தாக்குதலில், ஹவாய் சாட்டிலைட் போன் பயன்படுத்தப்பட்டதாக NIA விசாரணையில் தெரிய வந்தது. இந்தியாவில் தடை விதிக்கப்பட்ட சீன நிறுவனமான ஹவாய், மேட் 60 ப்ரோ, பி60 தொடர் மற்றும் நோவா 11 அல்ட்ரா உள்ளிட்ட உள்ளமைக்கப்பட்ட செயற்கைக்கோள் தொடர்பு அம்சங்களுடன் பல ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்கிறது. இவை, சீனாவின் டியான்டாங்-1 செயற்கைக்கோள் நெட்வொர்க்குடன் பிரத்யேகமாக இணைக்க வடிவமைக்கப்பட்டுள்ளன.
சீன சிம் கார்டுகளில் இயங்கும் சீன தொலைப்பேசிகள், உள் செயற்கைக்கோள் ஆண்டெனாக்கள், வெளிப்புற உபகரணங்கள் இல்லாமல் தகவல்களைப் பரிமாற அனுமதிக்கின்றன. மேலும், கவரேஜ் இல்லாத பகுதிகளிலும் கூட இயங்குகின்றன. பாகிஸ்தானிலிருந்தோ அல்லது வேறு நாட்டிலிருந்தோ இந்த ஹவாய் போன்கள் இந்தியாவுக்குள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஹவாய் நிறுவனத்தின் Mate 60 Pro மற்றும் P60 ரக போன், ஒரு வழக்கமான ஸ்மார்ட்போன் போலவே இருக்கிறது. ஒரே வேறுபாடு சாட்டிலைட் மூலம் இயங்குகிறது. சீனாவின் டியான்டாங்-1 செயற்கைக்கோள் உள்கட்டமைப்பு மூலம் செயல்படுவதால், இந்திய கண்காணிப்பு அமைப்புகளின் கண்ணில் படாமல் தப்பித்துக் கொள்கிறது என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு 3 மாதங்களாக, பயங்கரவாதிகள் இந்த சாட்டிலைட் போனை பயன்படுத்தாமல் இருந்துள்ளனர். அண்மையில் மீண்டும் பயன்படுத்திய போது, மகாதேவ் மலையின் அடர்ந்த வனப் பகுதிக்குள் அவர்கள் பதுங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் உள்ளூர் மக்களிடம் பயங்கரவாதிகள் குறித்த தகவல்களைக் கொடுத்துக் கண்காணித்து தகவல் கொடுக்குமாறு புலனாய்வு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் கீழ் பயங்கரவாதிகளின் பதுங்கியிருந்த இடத்தை ராணுவம் உறுதிப்படுத்தியது.
கடந்த ஜூலை 22 ஆம் தேதி, பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியில் சென்சார்கள் மூலம் பயங்கரவாதிகளின் இருப்பை உறுதி செய்தனர். பின்னர், இந்திய ராணுவத்தின் 4 பாரா சிறப்புப் படைகள், CRPF மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் இணைந்து நடத்திய ஆப்ரேஷன் மகாதேவ் நடவடிக்கையில், சுலைமான் ஷா உட்பட மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளிடமிருந்து பஹல்காம் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு எம்-9 மற்றும் இரண்டு ஏகே-47 துப்பாக்கிகள் மீட்கப் பட்டுள்ளன. இந்தியாவுக்கு எதிராக இனி யோசிக்க முடியாத அளவுக்குத் தாக்குதல் நடத்தி உள்ளோம் என்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளது மறுக்க முடியாத உண்மை என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.