அமெரிக்காவின் வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியாவின் நலன் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என மக்களவையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இதுகுறித்து மக்களவையில் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், வரி விகிதங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.
ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலத்தில் இந்தியா உலகின் முதல் 5 பொருளாதாரங்களுக்குள் வந்துள்ளதாகக் கூறிய அவர், உலகளாவிய நிறுவனங்கள் இந்தியாவை உலகப் பொருளாதாரத்தில் ஒரு பிரகாசமான இடமாகப் பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்காவின் 25 சதவீத வரி விதிப்பால் ஏற்படும் தாக்கத்தை மத்திய அரசு ஆராய்ந்து வருவதாகக் கூறிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், விவசாயிகள், சிறு-குறு தொழில் முனைவோர் மற்றும் ஏற்றுமதியாளர்களின் நலனைப் பாதுகாக்க மத்திய அரசு மிகுந்த முன்னுரிமை அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.