அரசு மருத்துவமனைகளின் அவலங்களைப் பற்றி வாய்திறப்பவர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், இந்தக் கொடுமையை என்ன சொல்லி மடைமாற்றப்போகிறார்? என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட மாரியம்மாள் என்ற மூதாட்டிக்கு, இரு கண்களிலும் பார்வை பறிபோய்விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.
திமுகவின் அலங்கோல ஆட்சியில் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு முற்றிலுமாக உருக்குலைந்து கிடப்பதற்கான சான்று இது. குறிப்பாக, அடுத்தகட்ட சிகிச்சை அளிக்க அந்த அரசு மருத்துவமனையில் வசதிகள் இல்லாததால் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்லுமாறும், மருத்துவச் செலவுகளைத் தானே ஏற்றுக் கொள்வதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரிடம் கூறி தனது தவறை மூடி மறைக்கப் பார்த்துள்ளனர் கோவில்பட்டி அரசு மருத்துவர்கள்.
அரசு மருத்துவமனைகளின் அவலங்களைப் பற்றி வாய்திறப்பவர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், இந்தக் கொடுமையை என்ன சொல்லி மடைமாற்றப்போகிறார்? எனவே, ஆளும் அரசின் அலட்சியத்தால் தனது கண்பார்வையைத் தொலைத்த திருமதி. மாரியம்மாள் அவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்குவதோடு, அவர்களின் மேற்படி மருத்துவச் செலவுகளையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவேண்டும்.
மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர்களைப் பணியிடை நீக்கம் செய்வதோடு, தமிழகத்தில் இயங்கிவரும் அரசு மருத்துவமனைகளில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதையும் அரசு ஆய்வு செய்ய வேண்டுமென முதல்வர் ஸ்டாலினை நயினார் நாகேந்திரன்
வலியுறுத்தியுள்ளார்.