ஆண்டு தோறும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் என்று கொண்டாடி மகிழ்கிறோம்.அதே ஆண்டு, அதே நாளில் பரந்த பாரதம் மத அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கப் பட்டது. லட்சக்கணக்கில் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கோடிக்கணக்கான மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளான கொடூரம் அரங்கேறியது. ஒரு நாளும் மறக்க முடியாத, மறக்கக் கூடாத இந்திய வரலாற்றின் மிகக் கொடூரமான மனிதத் தன்மையற்ற அத்தியாயமே தேசப் பிரிவினையாகும். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைக்கப் பெறும் சூழல் நெருங்கிக்கொண்டிருந்தது. தேசத் தலைவர்கள் தங்கள் பதவிகள் பெறுவதற்காகப் பரபரப்பாக இருந்தனர். ஏற்கெனவே, இந்தியாவை மத அடிப்படையில், இரண்டாகப் பிரிப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. காஷ்மீரும் இந்த தந்திரத்துக்கு ஏற்ப திரிசங்கு சொர்க்கத்தில் நிற்பது போலச் சிக்கி இருந்தது.
காஷ்மீர் விஷயத்தில் மகாத்மா காந்தி ஒரு இடத்தில் கூட காஷ்மீர் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று கூறியது இல்லை. சொல்லப் போனால் அப்படியொரு எண்ணமே அவரிடம் இல்லை.
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையில் காஷ்மீரில் தேசத் துரோக குற்றச்சாட்டில், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஷேக் அப்துல்லாவைக் காஷ்மீர் மகாராஜா ஹரி சிங் சிறையில் அடைத்தார். காஷ்மீருக்குள் பண்டித நேரு நுழையத் தடை விதிக்கப் பட்டிருந்தது.
ஷேக் அப்துல்லா கைது, தமக்குத் தடை எனக் கடும் கோபத்தில் காஷ்மீருக்குச் செல்ல முயன்ற பண்டித நேரு, மகாராஜாவால் வீட்டுக்காவலில் சிறை வைக்கப் பட்டார்.காஷ்மீர் மகராஜாவுக்கு நெருக்கடி கொடுக்க முடிவு செய்த பண்டித நேரு, காந்தியைக் காஷ்மீருக்கு அனுப்ப மவுண்ட்பேட்டனிடம் கோரிக்கை வைத்தார்.
அதுவரை மகாத்மா காந்தி காஷ்மீருக்குச் சென்றதில்லை. காஷ்மீருக்குச் செல்ல திட்டமிடும்போதெல்லாம் அவருக்கு ஏதாவது ஒரு தடங்கல் வந்துவிடும். முகமது அலி ஜின்னா ஒரே ஒரு முறை தான் காஷ்மீருக்குச் சென்றுள்ளார். ஆனால், அப்போது அவர்மீது தக்காளிகளும் முட்டைகளும் வீசப்பட்டன என்பது வரலாறு.
மகாத்மா காந்தி வருவதைக் காஷ்மீர் மக்கள் விரும்பவில்லை.ஆகவே அவரது பயணத்தை ரத்து செய்யுங்கள் என்று மவுண்ட்பேட்டனுக்கு காஷ்மீர் மகாராஜா கடிதம் எழுதினார். அதில் ,காஷ்மீரில் நிலவரம் சரியாகும் வரை எந்த அரசியல் தலைவரும் வருவதை தாங்கள் விரும்பவில்லை என்பதே தங்களின் உறுதியான நிலைப்பாடு என்றும் மகாராஜா தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.
அதையும் மீறி தமது 77 வயதில் காஷ்மீருக்குப் பயணம் மேற்கொண்டார் மகாத்மா காந்தி. சுதந்திரம் கிடைப்பதற்கு 14 நாட்களுக்கு முன், மகாத்மா காந்தி ராவல்பிண்டி வழியாக ஓர் ஆபத்தான வழியில் காஷ்மீருக்கு முதலும் கடைசியுமாகப் பயணம் மேற்கொண்டார். காஷ்மீருக்குக் கிளம்பும் முன், 1947 ஜூலை 29ம் தேதி, இந்தியாவுடன் இருக்க வேண்டும் என்று அவர்களிடம் கூற தாம் காஷ்மீருக்குச் செல்லவில்லை என்று அறிவித்தார் மகாத்மா காந்தி.
காஷ்மீரை இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ சேர சொல்ல மாட்டேன் என்றும், காஷ்மீர், காஷ்மீர் மக்களுக்குச் சொந்தம் என்றும், யாருடன் இணைய வேண்டுமென்று முடிவெடுக்கும் அதிகாரம் மக்களுக்கு மட்டுமே உள்ளது என்றும் தெரிவித்திருந்தார். ஏற்கனவே காஷ்மீர் மகாராஜா மீது வெறுப்பில் இருந்த பண்டித நேரு, தேசிய மாநாட்டுக் கட்சித் தொண்டர்களை மகாத்மா காந்தி உடனேயே இருக்க உத்தரவிட்டிருந்தார்.
அதனாலேயே, காஷ்மீரில் வந்த மகாத்மா காந்தி இருந்த மூன்று நாட்களும் அவரின் நிழலாகவே தேசிய மாநாட்டுக் கட்சியினர் இருந்தனர். குறிப்பாக,ஷேக் அப்துல்லா குடும்பத்தினர்.அந்த மூன்று நாட்களில் பலமுறை மகாத்மா சந்தித்தனர். ஆனால், இந்து அமைப்பினர் சார்பாக யாரையும் மகாத்மா காந்தி சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஷேக் அப்துல்லா ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுவதால்,காங்கிரஸ் அவருடன் இருக்கிறது என்றும், சிறையில் இருந்து அவரை விடுதலை செய்யவேண்டும் என்றும், யாரோடு இணைவது என்பது குறித்து அவருடன் ஆலோசனை நடத்தப்பட வேண்டும் என்றும் மகாராஜா ஹரி சிங் மற்றும் இளவரசர் கரன் சிங் ஆகியோரிடம் மகாத்மா காந்தி தெரிவித்தார்.
இதற்கிடையே, காஷ்மீரின் கில்கிட் பகுதியைக் காஷ்மீர் அரசிடம் முறைப்படி ஒப்படைக்காமல், திடீர் முடிவாக ஆகஸ்ட் ஒன்றாம் தேதி, தனது கொடியை இறக்கிவிட்டு மூவர்ணக் கொடியை ஏற்றியது பிரிட்டிஷ் அரசு. இதையறிந்த காஷ்மீர் மன்னர், பிரிகேடியர் கன்சாரா சிங்கை இப்பகுதிக்கு ஆளுநராக நியமித்தார். மேலும் மேஜர் ப்ரவுன் மற்றும் கேப்டன் மாடிஸம் ஆகியோர் தலைமையில் பாதுகாப்புப் படைகளை அனுப்பி வைத்தார்.
இப்படையில் பெரும்பாலான வீரர்கள் இஸ்லாமியர்கள், அடுத்த இரண்டு மாதங்களில் பல துரோகங்கள் நடப்பதற்கு இதுவே காரணமாகி விட்டது.