கடலுக்கு அடியில் மூழ்கிக் காணாமல் போன நகரம் ஒன்று கியூபாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரமிடுகளை விடப் பழமையானது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், மனித வரலாற்றை மாற்றியமைக்கக் கூடும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
1960ம் ஆண்டுகளில் கியூபாவின் டெல் ரியோ மாகாணத்தில் உள்ள குவானாஹகாபிபப்ஸ் தீபகற்பத்தின் கரையின் மிகப்பெரிய கட்டமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான மர்மங்களுக்கு விடை கிடைக்காத நிலையில், விவாதங்கள் பல ஆண்டுகளாக நீடித்தே வந்தன.
இந்நிலையில்தான், கடலுக்குள் அடியில் நகரம் போன்ற மிகப்பெரிய கட்டமைப்பு இருப்பதைக் கனடாவைச் சேர்ந்த கடற்பொறியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவைச் சேர்ந்த கடல் பொறியாளர்களான (Paulina Zelitsky) பௌலினா ஜெலிட்ஸ்கி மற்றும் (Paul Weinzweig) பால் வெயின்ஸ்வீக் இருவரும், கியூபாவின் கடல்தளத்தை வரைபடமாக்கும் பணியை மேற்கொண்டிருந்தனர். கடந்த 2001ம் ஆண்டு சோனார் ஸ்கேன்கள் உதவியுடன் கடல் தளத்தைப் பார்வையிட்டபோது, 2000 அடி ஆழத்தில் கடலுக்கு அடியில் நகரத்தைப் போன்ற ஒரு கட்டமைப்பு ஒன்று அவர்களது கண்களில் சிக்கியது.
பிரமீடுகள், சாலைகள், கட்டடங்கள் என ஒவ்வொன்றும் நேர்த்தியாக இருந்த கட்டமைப்பு அதன் நம்பகத்தன்மை பற்றிய விவாதங்களைத் தூண்டியுள்ளது. 6000 ஆண்டுகளுக்கு முந்தியதாகக் கருதப்படும் இந்த அமைப்பு, பண்டைய நாகரிகத்தின் சான்றா அல்லது இயற்கையாக உருவானதா என்ற இருவேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, இந்த அமைப்பு கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடிப்பு அல்லது நிலவியல் செயல்பாடுகளால் உருவாகியிருக்கலாம் என்று ஒரு சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இந்த மர்மம் இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. ஆனால் இதனை மறுத்துள்ள கடற்பொறியாளர் ஜெலிட்ஸ்கி, மிகவும் நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்ட இந்த கட்டமைப்பு உண்மையிலேயே ஒரு அற்புதமான அமைப்பு என்றும், இது ஒரு பெரிய நகர்ப்புற மையமாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
நீரில் மூழ்கிய இந்த அமைப்பு உண்மையில் பழங்கால நகரத்தின் சான்றாக இருக்குமாயின்,மனித நாகரிகம் உண்மையிலேயே எவ்வளவு பழமையாக இருந்திருக்கக் கூடும் என்று எதிர்பார்ப்பை புவியியல் ஆய்வாளர்களிடையே எழுப்பியுள்ளது. எகிப்திய பிரமிடுகளை விடப் பழமையானது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், மனித வரலாற்றை மாற்றியமைக்கக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.