தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களில் ஸ்டாலின் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்த விளம்பரத்தில் முதலமைச்சரின் பெயரையும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படத்தையும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதிமுக மக்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, சுந்தர் மோகன் ஆகியோர் விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர்.
இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் அரசு விளம்பரங்களில் முதலமைச்சரின் புகைப்படத்தை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும், முதலமைச்சரின் பெயரையும், கட்சியின் கொள்கை தலைவர்களின் புகைப்படத்தையும், மற்றும் முன்னாள் முதலமைச்சர் புகைப்படத்தையும் பயன்படுத்துவது முரணானது எனவும் தெரிவித்தனர்.
அரசு திட்டத்தில் அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், அரசு திட்டத்தில் ஆளும் கட்சியின் பெயர், சின்னத்தை பயன்படுத்துவது உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு விரோதமானது என தெரிவித்தனர்.
இதையடுத்து, உத்தரவை மாற்றியமைக்கக் கோரி, தமிழக பொதுத்துறை செயலாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.