மதுரை மாவட்டத்தின் பாசன கால்வாய்களில் கலக்கும் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு சாகுபடியும் வெகுவாக குறைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். விவசாய நீரில் கழிவுநீர் கலப்பது தொடர்பாகப் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் விவசாயத்தை விட்டே வெளியேற வேண்டிய சூழலுக்கு மதுரை விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், வாடிப்பட்டி, கள்ளந்திரி, சிட்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் இருபோக பாசன வசதியும், மேலூர், வெள்ளலூர், கீழவளவு, கொட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 85 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் ஒருபோக பாசனமும் நடைபெற்று வருகிறது.
இத்தகைய சாகுபடிக்கு ஆதாரமான பாசன கால்வாய்கள் கழிவுநீர் கால்வாய்களாகக் காட்சியளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஒத்தக்கடை நகர் பகுதியில் செல்லும் இந்த பாசன கால்வாய்களில் மதுரை மாநகராட்சியின் திட மற்றும் திரவக் கழிவுகள் நேரடியாகக் கலப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
உணவகங்கள், வணிக நிறுவனங்கள், இறைச்சிக் கடைகள் மற்றும் குடியிருப்புகளின் மொத்த கழிவுகளும் பாசன கால்வாயில் கொட்டப்படுவதால் விவசாயத்திற்குச் செல்லும் தண்ணீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அதோடு மருத்துவக் கழிவுகளும், மது பாட்டில்களும் அதிகளவு காணப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு, விவசாயத்தின் மகசூலும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
பாசன கால்வாய்களில் கலக்கும் கழிவுநீர் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் பலர் விவசாயத்தை விட்டே வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் விவசாய சாகுபடி பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும் நிலையில், பாசனக் கால்வாய்களில் கழிவுநீர் கலக்கும் நிலை விளைநிலங்களை விற்பனை மனைகளாக மாற்றும் சூழலுக்குத் தள்ளியுள்ளது.
ஒவ்வொரு முறையும் பாசன கால்வாயில் தண்ணீர் திறப்பதற்கு முன்பாக அக்கால்வாய்களை தூர்வாராவதோடு, இதுபோன்ற கழிவுகள் கலக்காவண்ணம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்