தஞ்சையில் திமுக மேயரைக் கண்டித்து அக்கட்சியின் உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மாமன்ற அலுவலகம் போராட்டக்களமாக மாறியது.
தஞ்சாவூர் மாநகராட்சியில் மேயர் ராமநாதன் தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது திமுகவை சேர்ந்த 12வது மாமன்ற உறுப்பினரான வெங்கடேஷ் என்பவர் கடந்த மூன்று மாதமாக கூட்டம் நடத்தாமல் தற்போது ஏன் கூட்டம் நடத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.
மேலும், கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதற்கு மேயரும், ஆணையரும் மறுப்பு தெரிவித்தால் திமுக உறுப்பினர்களுக்கும், மேயருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை அடுத்து மேயரை கண்டித்து திமுக எதிர்ப்பு உறுப்பினர்கள் 19 பேர் வெளிநடப்பு செய்தனர். இதனை தொடர்ந்து மேயருக்கு ஆதரவான மாமன்ற உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர் பாதாள சாக்கடை குறித்து பல முறை புகார் அளித்தும் மேயர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை அடுத்து கூட்டத்தை விட்டு மேயர் வெளிநடப்பு செய்தார்.
இதனை தொடர்ந்து, மாமன்ற கூட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆணையர் அலுவலகம் முன்பு மேயர் எதிர்ப்பு திமுக உறுப்பினர்கள், அதிமுக, பாஜக மாமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆணையர் அலுவலகத்தை விட்டு வெளியேறினார். இதனால் ஆத்திரமடைந்த திமுக, அதிமுக, பாஜக மாமன்ற உறுப்பினர்கள் ஆணையர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.