சீனா மற்றும் பாகிஸ்தானின் கூட்டு அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்தியா தனது இராணுவ கட்டமைப்பை அதிநவீனமாக்கியுள்ளது. அந்த வகையில், அனைத்து ஆயுத ருத்ரா படையணிகள், இலகுரக பைரவ் கமாண்டோக்கள் மற்றும் ட்ரோன் பொருத்தப்பட்ட காலாட்படை பிரிவுகளை இந்திய ராணுவம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமைதிக்கான வாய்ப்பை வழங்கியும்,ஏற்றுக்கொள்ளாத பாகிஸ்தான் கோழைத்தனமாக இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டது. வீரத்தின் முழக்கமான ஆப்ரேஷன் சிந்தூர்- இந்திய இராணுவத்தின் தேசப் பாதுகாப்பின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது.
அதேநேரம், தனது இராணுவ கட்டமைப்பில் உள்ள இடைவெளிகளையும் இந்தியா தெரிந்து கொண்டது. தனித்தனியாக ஆயுதங்களை நம்பியிருந்ததால் பதிலடி கொடுப்பதற்கு அதிகம் நேரம் தேவைப்பட்டது.
இந்த அனுபவம், இராணுவத்தை மிகவும் ஒருங்கிணைந்த கூட்டாண்மைக்குத் தள்ளியுள்ளது. காலாட்படை-கனரக அமைப்புகளை நம்புவதற்குப் பதிலாக, விரைவாகவும் தீர்க்கமாகவும் பதிலளிக்கக்கூடிய நவீன தொழில்நுட்பம் சார்ந்த பிரிவுகளை இந்திய இராணுவம் உருவாகியுள்ளது.
இந்தியாவின் இராணுவம் அதன் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் வலிமையான போர் தயார்நிலையை உறுதிப்படுத்தும் முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த ஆண்டு கார்கில் போர் வெற்றிநாளில், இந்திய இராணுவத்தை எதிர்காலத்திலும் வெற்றிப் படையாக நவீனமயமாக்கும் வகையில் முக்கிய அறிவிப்புக்களை இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி அறிவித்துள்ளார்.
காலாட்படை, பீரங்கி மற்றும் கவசப் பிரிவுகளில் பட்டாலியன் அளவில் ட்ரான்கள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை ஒருங்கிணைப்பது இந்த புதிய அறிவிப்பின் நோக்கமாகும். அதாவது, ருத்ரா படைப்பிரிவுகளை உருவாக்குவது இந்த மாற்றத்தின் முக்கிய அம்சமாகும்.
ஏற்கனவே சில படைப் பிரிவுகள் ட்ரோன்களைக் கொண்டிருந்தாலும், அவை தற்போது துணை அமைப்புகளாகவே கருதப்படுகின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ராணுவ வீரர்களே ட்ரோன்களை இயக்க வேண்டியுள்ளது. அதனால், ராணுவ வீரர்களின் வழக்கமான கடமைகளைச் செய்ய முடியாமல் போகின்றன. ஆகவே இந்தப் புதிய மாற்றங்கள் கொண்டுவரப் பட்டுள்ளன.
ஒவ்வொரு படைப் பிரிவிலும் இனி ஒரு பிரத்யேக ட்ரோன் அமைப்பு இருக்கும் என்றும், ஒரு பிரிவுக்கு சுமார் 70 ட்ரோன் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறப் பட்டுள்ளது. காலாட்படை, டாங்கிகள், பீரங்கிகள், இயந்திரமயமாக்கப்பட்ட படைகள், சிறப்புப் படைகள் மற்றும் ட்ரோன்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நிரந்தர அனைத்து ஆயுதப் போர் பிரிவுகளும் மேம்படுத்தப்படுகின்றன.
எல்லைகளில் விரைவான தாக்குதல் நடவடிக்கைகளுக்காக, போர் தயார்நிலையை மேலும் கூர்மைப்படுத்துவதற்கு, ருத்ரா படைப்பிரிவுகள் உருவாக்கப் பட்டுள்ளன. ஒருங்கிணைந்த, அனைத்து ஆயுத அமைப்புகளும் நிலப்பரப்புகளில் தன்னிச்சையாகச் செயல்படும் நோக்கத்தில் இந்த ருத்ரா படைப் பிரிவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ருத்ரா படைப்பிரிவுகளுடன், புதிய பைரவ் லைட் கமாண்டோ பிரிவுகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
பைரவ் பிரிவுகள் வழக்கமான காலாட்படையிலிருந்து, 30 லைட் கமாண்டோ படைப் பிரிவுகள் உருவாக்கப் பட்டுள்ளன. ருத்ரா மற்றும் பைரவ் பிரிவுகளை உருவாக்கிய இந்திய இராணுவத்தை எதிர்கால போர்க்களத்துக்கு ஏற்றதாக உருமாறியுள்ளது. ஒவ்வொரு படைப்பிரிவிலும் ட்ரோன் படைப்பிரிவுகள் மற்றும் ஸ்மார்ட் பீரங்கிகள் என நவீன போருக்கு இராணுவமும் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.
ஒவ்வொரு காலாட்படை பிரிவிலும், ட்ரோன் படைப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பீரங்கிகளின் துப்பாக்கிச் சக்தி, திவ்யாஸ்திர பேட்டரிகள் மற்றும் அலைந்து திரியும் வெடிமருந்து பேட்டரிகள் மூலம் பல மடங்கு பெருக்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் வான் பாதுகாப்புகளும் விரிவுபடுத்தப்படுகிறது. சீனாவின் எல்லையை ஒட்டியுள்ள உயரமான பகுதிகளில் பயன்படுத்துவதற்காக ஆகாஷ் பிரைம் தரையிலிருந்து வான் ஏவுகணைகளின் இரண்டு புதிய படைப்பிரிவுகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த அமைப்புகள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களை 25 கிலோமீட்டர் தூரம் வரை இடைமறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ராணுவத்துக்கும், இந்திய விமானப்படைக்கும் பயன்படும் வகையில், கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகள் 36,000 கோடி செலவில் வாங்கப்படுகின்றன. இவை அந்நிய அச்சுறுத்தல்களுக்கு எதிராக மொபைல், குறுகிய தூரப் பாதுகாப்பை வழங்கும் என்று கூறப் பட்டுள்ளது.
புத்திசாலித்தனத்துடனும், அதிவேகமாகவும், செயல்படுவதற்கு ஏற்ப, தொழில்நுட்பத்திலும் நவீனமயமாகி வரும் இந்திய இராணுவம், எதிர்கால போருக்கு முழுமையாகத் தயாராகி விட்டது என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.