4 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு? என்று மத்திய அமைச்சர் எல். முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தூத்துக்குடியில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி ரூ.32,000 கோடி மதிப்பில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு இருப்பதாக தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். தென் தமிழ்நாட்டில் இதுவரை பார்க்காத தொழில்வளர்ச்சி ஏற்பட்டு இருப்பதாகவும், தூத்துக்குடியில் விண்வெளிப் பூங்கா அமைக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் , தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம், தூத்துக்குடி துறைமுகத்தில் மேம்பாட்டு பணிகள், எளிமையான சரக்கு போக்குவரத்து வசதிக்கென தேசிய நெடுஞ்சாலைகள், சரக்கு போக்குவரத்துக்காக ரயில் திட்டங்கள் என தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை மத்திய அரசு முனைப்புடன் தொடர்ந்து செய்து வருகிறது.
ஆனால், தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களுக்கு தங்கள் பெயரில் ஸ்டிக்கர் மட்டுமே ஒட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் எத்தனையோ முதலீட்டாளர்கள் மாநாடு, முதலீட்டாளர்கள் சந்திப்புகளை முதலமைச்சர் நடத்தி விட்டார். ஆனால், இதுவரை தமிழகத்திற்கு கிடைத்தது என்ன?
சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டில் 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ரூ.9.74 லட்சம் கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டாக முதலமைச்சர் பெருமிதம் பொங்க கூறினார். அதன் மூலம், 18.70 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 14 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்கும் என கூறியிருந்தார். ஆனால், உறுதியளிக்கப்பட்ட தொகையில் 1.80% அளவுக்கு மட்டுமே முதலீடு செய்யப்பட்டு, நிறுவனங்கள் ஏதுவும் தொடங்கப்பட்டவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு முன்பாகவே முதலீட்டை உறுதி செய்திருந்த பல நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கூட, இந்த மாநாட்டில் கணக்கு காட்டப்பட்டதாக தகவலும் வெளியாகின.
முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின் போது, துபாய் 6 ஒப்பந்தங்கள், அமெரிக்காவில் 19, ஸ்பெயினில் 3, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் தலா 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஆனால் இந்த ஒப்பந்தங்களின் தற்போதைய நிலைமை என்னவென்பதை திமுக அரசு இதுவரை அறிவிக்கவில்லை. கடந்த 4 ஆண்டுகளில், ரூ.10.30 லட்சம் கோடி அளவுக்கு, உறுதி செய்யப்பட்ட முதலீடு, 32.29 லட்சம் பேருக்கு உறுதியளிக்கப்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் 898 திட்டங்களை ஈர்த்துள்ளதாக தூத்துக்குடியில் தற்போது முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். திமுக அரசு கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஈர்த்ததாக கூறும் தொகையின் அளவை கேட்டால் மக்களுக்கு மயக்கம் தான் ஏற்படும்.
யாருக்கும் பயனின்றி வெற்று விளம்பரங்களுக்காக நடத்தப்படும் இதுபோன்ற முதலீட்டாளர்கள் மாநாட்டால் தமிழகத்திற்கு என்ன பயன்?
முதலீடுகளை ஈர்ப்பதாக கூறி முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களால் எந்தப் பயனும் இல்லை. தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகளாலும் பயனில்லை. தமிழ்நாடு தொன்றுதொட்டு உற்பத்தி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் காலத்தில் தொடங்கி தொழில் துறையில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.
மத்திய அரசின் பொருளாதார கொள்கை, உலக அளவில் நமது நாட்டின் மீது ஏற்பட்டு வரும் நன்மதிப்பு, மத்திய அரசின் திட்டங்கள், தமிழகத்தின் திறன் வாய்ந்த தொழிலாளர்கள் போன்ற காரணங்களால் தொழில்துறையில் தமிழகம் சாதித்து வருகிறது. இதற்காக தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் பெருமைபட்டுக் கொள்ள முடியும்.
ஆனால் போலி திராவிட மாடல் ஆட்சி நடத்தும் திமுகவினர் இதனை தங்கள் சாதனையாக விளம்பரப்படுத்த முடியுமா?
தமிழகத்தில் ரூ.8000 கோடி அளவுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டிருந்த இரு வெளிநாட்டு நிறுவனங்கள், தமிழகத்தில் சாதகமான சூழல் இல்லை என்று கூறி, ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் முதலீடு செய்ததாக சில மாதங்களுக்கு முன்பு ஊடகங்களில் செய்தி வெளியானது. இது தான் தமிழகத்தின் இன்றைய எதார்த்த நிலை.
2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக தமிழகத்தை மாற்றுவேன் என சூளுரைத்தால் போதுமா? நாங்குநேரி தொழிற்பேட்டை, விருதுநகர் ஜவுளி பூங்கா, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என பல மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட தொழில் மேம்பாட்டு திட்டங்கள் எல்லாம் வெற்று அறிவிப்பாகவே உள்ளன. அவற்றின் நிலை என்னவென்பதை முதலமைச்சர் தமிழக மக்களுக்கு அறிவிப்பாரா?
தமிழகத்தில் இன்று வளம்கொழிக்கும் தொழிலாக விளங்குவது சாராய ஆலைகள் மட்டும் தான். இதன் மூலம் திமுகவினர் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற போட்டா போட்டியிடுகின்றனர். சொந்த குடும்பங்கள் வளம்பெற ஆட்சி நடத்தும் திமுகவினரிடம் தமிழகத்தின் நலனை எப்படி எதிர்பார்க்க முடியும்.
எனவே தமிழகத்தில் இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு, புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு எந்தெந்த நிறுவனங்கள் தொழிற்சாலையைத் தொடங்கி உள்ளன? அதன் தற்போதைய நிலை என்ன? முதலீடு மாநாடு நடத்தி கிடைத்த பயன் என்ன?
இவற்றையெல்லாம் தமிழக மக்களுக்கு திமுக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தமிழகத்துக்கு வந்த முதலீடுகள் குறித்து மக்களுக்குத் தெரியும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அப்பொழுதுதான் எந்தெந்த நிறுவனங்கள் தமிழகத்தில் வந்துள்ளன, தமிழகத்தின் உண்மையான நிலவரம் என்னவென்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியும்.
இல்லையெனில், முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலினும் அவரது அமைச்சர்களும் அள்ளி விடும் அறிவிப்புகள் வெறும் வெற்று விளம்பர அறிவிப்புகள் மட்டுமே என்பது உறுதியாகும் என்று எல். முருகன் குறிப்பிட்டுள்ளார்.