புற்றுநோயைக் குணப்படுத்த ரஷ்யா கண்டுபிடித்துள்ள தடுப்பூசி அடுத்த சில வாரங்களில் மனிதர்களுக்குச் செலுத்தி சோதனை செய்யப்படவுள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றால் மருத்துவ உலகில் புதிய புரட்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்..
சில நோய்களின் பெயரைக் கேட்டாலே மனிதக்குலம் குலை நடுங்கும். அத்தகைய நோய்களில் முதன்மையானது புற்றுநோய். உணவு முறையில் ஏற்பட்ட மாற்றம், சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பல காரணங்களால் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்த நோயை முழுவதுமாக குணப்படுத்த இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படாததால், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக, அமெரிக்காவும், ரஷ்யாவும் இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த Memorial Sloan கேட்டரிங் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் கடந்தாண்டு மருந்து ஒன்றைக் கண்டுபிடித்தது. நோயாளிகளுக்கு அதனைச் செலுத்தி சோதனை செய்ததில் புற்றுநோய் குணமானதாகவும் அறிவிக்கப்பட்டது. நோயாளிகளுக்கு கீமோதெரபி வழங்காமல், dostarlimab என்ற மருந்தை மட்டும் கொடுத்து புற்றுநோய் குணமாக்கப்பட்டது.
ஆனால், குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளை மட்டுமே வைத்து அந்த மருந்து சோதனை செய்யப்பட்டது. மருந்தின் தன்மையை முழுமையாக அறியப் பெரிய எண்ணிக்கையில் சோதனை செய்ய வேண்டியது அவசியம். இப்படி, புற்றுநோய் மருந்து தொடர்பான ஆய்வில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில்தான், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ரஷ்யா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
தங்கள் நாட்டு விஞ்ஞானிகள் புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்தை கிட்டவிட்ட கண்டுபிடித்து விட்டதாகவும், இறுதிக்கட்ட சோதனை முடிந்துவிட்டால், நோயாளிகளுக்கு இந்த மருந்து இலவசமாக வழங்கப்படும் எனவும் ரஷ்யச் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இந்நிலையில், அந்த ரஷ்யா கண்டுபிடித்துள்ள mRNA என்ற அந்த மருந்தின் இறுதிக்கட்ட சோதனை இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ளது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இந்த இறுதி சோதனை தொடங்கும் எனவும், தடுப்பூசியைப் பெறவுள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புற்றுநோய் தடுப்பூசி, புரதங்கள் அல்லது உயிரணுக்களால் உருவாகும் ஆன்டிஜென்களை அழிக்க நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ரஷ்யாவின் இந்த சோதனை வெற்றிபெறும் பட்சத்தில், காசநோயைப் போல அம்மையைப் போலப் புற்றுநோயும் முழுமையாக ஒழிக்கப்படும்.