நாடு முழுவதும் சிறப்பாகச் செயல்படுத்தப்படும் ஜல்ஜீவன் திட்டம் தமிழகத்தில் சரிவர நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் எங்கே செல்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவின் அனைத்துக் கிராமப்புற குடும்பங்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என்பது தான் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜல்ஜீவன் திட்டத்தின் மிக முக்கியமான நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1.25 கோடி கிராமப்புற வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பு வழங்கத் திட்டமிட்டு அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் ஜல்ஜீவன் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிலையில், அப்பணிகள் முறையாக நடைபெறாத காரணத்தினால் பெரும்பாலான பகுதிகளில் குடிநீருக்காகப் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கலங்கல் ஊராட்சியின் தென்றல் நகர் பகுதியில் ஐந்து கிலோ மீட்டர் தூரம் பயணித்து தங்களுக்குத் தேவையான குடிநீரை எடுத்துவரும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த பத்து ஆண்டுகளாக ஊராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவகல்ம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதலமைச்சரின் தனிப்பிரிவு என மனு கொடுக்காத இடங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து இடங்களிலும் அப்பகுதி மக்கள் புகார் மனு அளித்துள்ளனர். மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தைப் பயன்படுத்தி தங்களின் பகுதிக்கும் குடிநீர் குழாய்கள் அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையை ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் துளியளவும் கண்டுகொள்ளவில்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
நாடு முழுவதும் சிறப்பாக அமல்படுத்தப்பட்டு வரும் ஜல் ஜீவன் திட்டம் தமிழகத்தில் மட்டும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை எனப் புகார் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், இனியும் இதே நிலை நீடித்தால் தங்களின் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றுவதோடு, குடும்ப அட்டைகளை வீதியில் வீசி போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்
மாநில மக்களுக்கு அடிப்படைத் தேவையான குடிநீரைக் கூட வழங்க முடியாத அரசு நிர்வாகம், அவர்களின் நலனையும் வாழ்க்கைத் தரத்தையும் எப்படி உயர்த்த முடியும் என்ற கேள்வி எழும் அதே நேரத்தில், மத்திய அரசு நிதி ஒதுக்கிய போதிலும் அதற்கான பணியை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.