தலைநகர் டெல்லியில் கடமை பாதை அருகே கட்டப்பட்டுள்ள புதிய கர்தவ்ய பவனை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
உள்துறை, வெளியுறவுத்துறை, கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒன்றிணைத்து டெல்லி கர்தவ்ய பாதை அருகே கர்தவ்ய பவன் கட்டப்பட்டது. பல்துறைகள் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் கட்டட வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார்.
இதைத்தொடர்ந்து கர்தவ்ய பவன் கட்டுமானத் தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
மாலையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.அப்போது பேசியவர், டில்லியில் மத்திய அரசின் அமைச்சகங்கள் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வாடகை கட்டடத்தில் இயங்கின, இதனால்அரசுக்கு 1,500 கோடி ரூபாய் செலவானது என தெரிவித்தார்.
கர்தவ்ய பவன் கட்டியதால் 1,500 கோடி ரூபாய் மிச்சம் எனக் கூறினார். இன்னும் பல கர்தவ்ய பவன்கள் வர உள்ளன எனக் கூறிய பிரதமர் மோடி, இந்த பவன் வளர்ச்சியடைந்த மற்றும் தன்னிறைவான இந்தியாவுக்கான நமது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது எனவும் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இந்தியாவை கட்டி எழுப்புவதற்கான உறுதிப்பாட்டை கர்தவ்ய பவன் பிரதிபலிப்பதாக தெரிவித்துள்ளார். கடின உழைப்பு மற்றும் உறுதிப்பாட்டுடன் அதனை கட்டி எழுப்பிய தொழிலாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.