மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடி, எம்.எஸ்.சுவாமிநாதனின் நினைவு நாணயம் மற்றும் நூற்றாண்டு நினைவு முத்திரையை வெளியிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஒரு சிறந்த விஞ்ஞானி, பாரத தாயின் உண்மையான மகன் என புகழாரம் சூட்டினார். அறிவியல் கண்டுபிடிப்புகளால் விவசாயத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய எம்.எஸ்.சுவாமிநாதன் பாரத தாயின் ரத்தினம் என தெரிவித்தார்.
விவசாயிகள் நலனே இந்தியாவின் முதல் முன்னுரிமை எனக்கூறிய அவர், விவசாயிகள், மீனவர்கள் நலன் சார்ந்த விவகாரங்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது என குறிப்பிட்டார். வர்த்தக ஒப்பந்தத்தில் வேளாண்துறையை சேர்க்க அமெரிக்க நிர்பந்திக்கும் நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் உள்ள விவசாயிகளின் நலனை காக்க தனிப்பட்ட முறையில் எவ்வளவு விலை கொடுக்கவும் தயாராக உள்ளதாக பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியுள்ளார்.