மதுரை பாண்டியன் கோட்டை பகுதியில் சாலையின் இருபுறங்களில் இருக்கும் கல்குவாரி பள்ளங்களால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. கல்குவாரிகளுக்கான அனுமதியின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அரசே பின்பற்றத் தவறிவிட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர் .
மதுரை- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சத்தியமங்கலம், ஆண்டார் கொட்டாரம், கல்மேடு, இளமனூர், ஒத்தவீடு ஆகிய பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் பாண்டியன்கோட்டை பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக சாலையின் இருபுறமும் செயல்பட்டு வந்த கல்குவாரிகள் முறையாக மூடப்படாமல் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. அதிலும் கருப்பாயூரணி, சத்தியமங்கலம் செல்லும் சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குச் செயல்படாமல் இருக்கும் கல் குவாரிகளின் பள்ளங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் பிரதான சாலையின் இருபுறங்களிலும் இருக்கும் கல்குவாரி பள்ளங்கள் குறித்த எச்சரிக்கை பலகைகளோ, தடுப்பு வேலிகளோ இல்லாத காரணத்தினால் அச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தெருவிளக்கு கூட இல்லாத இந்த சாலையில் இரவு நேரங்களில் பயணிப்பவர்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
வாகனங்கள் அவ்வப்போது விபத்திற்குள்ளாவதோடு, மேய்ச்சலுக்காகச் செல்லும் கால்நடைகளும் குவாரிகளின் பள்ளங்களில் விழுந்து உயிரிழந்து விடுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 15க்கும் அதிகமானோர் இப்பள்ளங்களில் விழுந்து உயிரிழந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆபத்தான சாலை குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குவாரிகள் அமைக்க அனுமதிக்கப்படும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அரசே மீறியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பெரும் விபத்து அரங்கேறும் முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.